இஸ்மாயில் ஹனியே படுகொலையும், மத்தியகிழக்கை மீண்டும் மையம் கொள்ளும் உலக அரசியலும் (பாகம் 1) பி. ஏ. காதர் 

இஸ்ரேல் இராணுவமும் அதன் வல்லமை பொருந்திய மொசாட்டும் (Mossad) இதற்கு முன்னரும் பல நுட்பமான தாக்குதல்கள் மூலம் – தமது எதிரிகள் எனக்கருதிய – மிகவும் பாதுகாக்கப்பட்ட  முக்கிய நபர்கள் மீது இலக்கு  வைத்து  ஹொலிவூட் திரைப்படப்பாணியில் திறமையானமுறையில்  அழித்துவந்துள்ளன.  இதன் மூலம் இஸ்ரேல்  என்பது வெல்லப்படமுடியாத ஆபத்தான நவீன இராணுவ குட்டி வல்லரசு என்ற பிம்பத்தை  கட்டிஎழுப்புவதில் இதுவரை  இஸ்ரேல் வெற்றி  பெற்றுள்ளது.

இஸ்ரேலின் சாகசத் தாக்குதல்கள்

07.1956 ம் திகதி  காசாவில் இயங்கிய எகிப்தின் உளவுத்துறை தளபதி முஸ்தபா ஹபாஸிடம் (Mustafa Hafaz)  சிறு கண்ணிவெடி பொருத்தப்பட்ட புத்தகம் ஒன்றை, ஓர்  இரட்டை முகவர் மூலம் விநியோகித்து, அவரைக் கொன்றது  முதல் ஆரம்பமான இத்தகைய திட்டமிட்ட  சாகச தாக்குதல்கள் 2024 ஜூலை 31 இஸ்மாயில் ஹனியே இலக்கு வைக்கப்படும் வரை மொத்தம் 199 இடம்பெற்றுள்ளதாக யூத இணையதளம் ஒன்று பதிவிட்டுள்ளது. (பார்க்க: https://www.jewishvirtuallibrary.org/israeli-targeted-killings-of-terrorists). உண்மையில் இத்தொகை இதனை விட அதிகமாகவே இருக்கும். இதில் ஈரானில் அடுத்தடுத்து மர்மானமுறையில் கொல்லப்பட்ட விஞ்ஞானிகளின் தொகை அடங்கவில்லை. இதுவரை தமது நிருபர்கள் 164 பேர் உண்மை செய்திகளை வெளியிட்டதற்காக இலக்குவைத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அல்ஜசீரா அறிவித்து ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற விபரத்தையும் வெளியிட்டிருந்தது. இப்படுகொலைகளும் அப்பட்டியலில் அடங்கவில்லை.

இஸ்மாயில் ஹனியே மீதான தாக்குதலின் சிறப்பம்சம் எனினும் இவற்றுக்கெல்லாம் இல்லாத முக்கியத்துவம் இஸ்மாயில் ஹனியே மீதான தாக்குதலுக்கு உண்டு. ஏனெனில் தற்போது மத்தியகிழக்கின்  புதிய இராணுவ வல்லரசாக வளர்ந்து வரும் ஈரான் தலைநகரில், அந்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, அரசவிருந்தினராக இராஜதந்திர கடவுசீட்டுடன் வந்த இஸ்மாயில் ஹனியே சாதரண ஒருவர் அல்ல. இன்றைய உலகின் மிக நவீன இராணுவ  குட்டி  வல்லரசான இஸ்ரேலின் கண்ணில் விரல்விட்டு  ஆட்டிக்கொண்டிருக்கும் ஹமாஸ் இயக் கத் தலைவர்களில் ஒருவர். பலதடவைகள் இஸ்ரேல் வைத்த மரணப்பொறியிலிருந்தது தப்பிப் பிழைத்தவர். இஸ்ரேலின் அழிக்கப்படவேண்டி நபர்களின் பட்டியலிலே  முன்வரிசையில் இருப் பவர். இவரைப் பாதுகாப்பதற்கு ஈரான் அனைத்து விசேட ஏற்பாடுகளையும்  செய்திருக்கும். அத்தனை தடைகளையும்  தாண்டி இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இவரது உயிருக்கு கடும் ஆபத்துள்ளது என்பதை புரிந்து கொண்டு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒரு ஹோட்டலில்  இரகசியமாக தங்கியிருந்த போது, அவருடன் ஏனைய அறைகளில் தங்கியிருந்த எவருக்கும் எவ்வித சேதமும் இன்றி, இவரும் இவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் மாத்திரம் துல்லியமான தாக்குதலில் ஆரவாரமின்றி நள்ளிரவில் கொல்லப்பட்டிருகிறார்கள்!  எவ்வாறு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, யாரெல்லாம் அதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதற்கான தடயம் எதுவுமே இதுவரை கிடைக்கவில்லை. இதனால் இஸ்ரேலின் உளவுத்துறையின் சாக சத்தை உலகம் வியந்துகொண்டிருக்கிறது. மறுபுறத்தில் ஈரானின்  உளவுத்துறை மீதான அவ நம்பிக்கை வலுப்பெற்றுவருகிறது. உக்ரைன் போர் வெடித்தபோது ரஸ்யாவுக்கு ஈரான் வழங்கிய ட்ரோன்கள் உலகை வியக்க வைத்தன.  அதன் பாதுகாப்பு குடைக்குள் பல மத்தியகிழக்கு  நாடுகள்  தமது  பழைய பகையை  மறந்து வரத்தொடங்கின.  இஸ்மாயில் ஹனியே மீதான தாக்குதல் அந் நாடுகளை அச்சம் கொள்ளவைத்துள்ளது.

இது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் கிடைத்த தற்காலிக – ஆனால் தேவையான – வெற்றியாகும். ஏனெனில் இவ்விரு நாடுகளும் உலக அரசியல் அரங்கிலும் இராணுவ ரீதியாகவும்   தொடர்ச்சியாக சந்தித்துவரும் தோல்வி களை மறைப்பதற்கும் உலக கவனத்தை  திசைதிருப்பு வதற்கும்  இவ்விரு நாடுகளுக்கும் இது இப் போதைக்கு உதவும்.  முதலில் அமெரிக்காவை விட இஸ்ரேலுக்கு இத்தாக்குதல் ஏன் முக்கியம் என்பதைப்  பார்ப்போம்.

இஸ்ரேலுக்கு ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான பின்னடைவுகளை மறைப்பதற்கு கடந்த 2023 அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் இஸ்ரேலில் உட்புகுந்து ஒரு மிலேச்சத்தனமான தாக்குதலை சிவிலியன்கள் மீது தொடுத்து நூற்றுக் கணக்கானவர்களை பணயக்கைதிகளாகப் பிடித்துச்சென்ற கோரச்சம்பவம் மொசாத்துக்கு விழுந்த பலத்த  அடியாகும். இதனால் மொசாத் மீதிருந்த அபரிமிதமான பிம்பம் பாதிக்கப்பட்டது. இஸ்மாயில் ஹனியே மீதான தாக்குதல் அதனை சரிசெய்வதற்கு இப்போதைக்கு உதவும்.

பிரதான விடயம் இது அல்ல. அதன் பின்னர் மாதங்கள் 10 ஆனபின்னரும் – தமது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சின்னஞ் சிறிய காசாவில்  மறைத்துவைக்கப்பட்டுள்ள  பணயக்கைதிகளை இதுவரை இஸ்ரேலாலும் அதன் பாதுகாவலன் அமெரிக்காவாலும்   மீட்க முடியவில்லை. இதுவரை இல்லாதளவு பொதுமக்கள்- சிறுவர், வயோதிபர், பெண்கள் உட்பட – சுமார் 40,000 பேர் வரை படுகொலை செய்யப் பட்டும், இதுவரை இல்லாத வான் தாக்குதல், தரைவழித் தாக்குதல் ட்றோண் தாக்குதல் மிசைல்ஸ்  தாக்குதல் என எல்லாவித தக்குதல்களை தொடுத்தும், அவர்களது பல்லாயிரக்கணக்கான வதிப்பிடங்களை அழித்தொழித்து அடிப்படை வசதி எதுவுமற்ற தற்காலிக கொட்டகைகளில் வாழ்வதற்கு நிர்பந்தித்தும்,  உணவு, நீர், மின் சார  விநியோகங்களை நிறுத்தியும் அடிக்கடி  புலம்பெயரச்செய்தும், கட்டு மீறிய கைதுகள் சித்திரவதைகள் என ஆக்கிரமிப் பாளனின்  கொடுங்

கோலாட்சியினது  அத்தனை கோர முகத்தை காட்டியும்  காசா மக்களிடமிருந்து பணயக்கைதிக ளும் ஹமாஸ் தலைவர்களும்  இருக்குமிடத்தை இஸ்ரேலால் அறிய முடியவில்லை. இத்தனை இனஒழிப்பின் பின்னரும் இதுவரை எந்த ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியையும் இஸ்ரேல் பெறவில்லை.

இதற்கிடையில், அக்டோபர் 7ன் பின்னர் ஹமாசுக்கு எதிராகத் திரும்பியிருந்த உலக அபிப் பிராயம்  இஸ்ரேல்  காசாமீதும் பலஸ்தீன மக்கள் மீதும் தொடுத்த வெறியாட்டத்தினால் விரைவில் மாற்றமடைந்தது. காசாமக்கள் மீதான அனுதாபம் அதிகரித்தது.  மேற்கு நாடுகள் அனைத்திலும் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.  ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டர் மீதும், பத்திரிகையாளர்  மீதும் மருத்துவசாலைகள் மீதும் மேற் கொள்ளப்பட்ட   தொடர்ச்சியான தாக்குதல்கள் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகின.

இதன் விளைவாகமே 2024 இல், சர்வ தேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக் கறிஞரான கரீம் அஹ்மத் கான், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான  குற்றச்சாட்டின் பேரில், நெதன்யாகுவுக்கு எதிராக ஒரு கைது வாரண்டைப் பயன் படுத்துவதற்கான தனது நோக்கங்களை அறிவித் தார். அதனை அடுத்து  19.07.2024ல்பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக் கிரமித்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்ட சர்வதேச உயர்நீதிமன்றம் இஸ்ரேல்  சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என குற்றம்சாட்டியது. ஸ்பெயின் இத்தாலி கனடா, பிரித்தானியா போன்ற இஸ்ரேலின் தோழமை நாடுகள்  கூட  நெதன்யாகுமீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுமானால் அதனை நாம் அமுல்படுத்துவோம் என பகிரங்கமாக அறிவித்தன.

இதனால் இஸ்ரேல் வெகுவாக தனிமைப் பட்டது. நெதன்யாகுவின் கடும்போக்குக்கு எதி ராக இஸ்ரேலுக்குள்ளேயே வரலாறு காணாத யூத மக்கள் போராட்டம்  வெடித்தது, அவர்  பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை வலு பெற்று வந்தது. இஸ்ரேலின் யுத்த அமைச்சரவை பிளவுபட்டது.  நெதன்யாகு தனது சுயநல அரசியல் இருத்தலுக்காக இஸ்ரேலின் நலனை பலிகொடுக்கிறார் என்ற கருத்து வலுப்பெற்று வந்தது. நெதன்யாகுவின்  22-27,ஜூன் 2024 அமெரிக்க விஜயத்தின் போது அவருக்கு எதிராக -தடை களையும் மீறி – நடைபெற்ற மக்களின் ஆர்ப்பாட்டங்கள், அவற்றில் பெருமளவு யூதர் களும் கலந்து கொண்டமை, அவர் காங்கிரசில் 52 நிமிடம் உரையாற்றும் போது ஹவு ஜனநாயகக் கட்சியின் செனட்டர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் புறக்கணித்தமை, ஆகியவை அவர் மதிப்பிழந்த ஒருவர் என்பதைக்  காட்டியது மறுபுறத்தில் மற்றொரு அதிர்ச்சியான அரசியல் நிகழ்வொன்று நடந்தது.  2024 ஜூலை 23 சீனாவின் முயற்சியால் 14 பாலஸ்தீனிய குழுக்களிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று சீனாவில் கைச்சாத்திடப் பட்டது.

இஸ்ரேல் தனது பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பலஸ்தீனிய குழுக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதில் அதுவரை வெற்றி பெற்றுவந்தது. அதன் பிரித்தாளும் தந்திரோபாயம் இதனால் பெரும்  பின்னடைவை சந்தித்தது. ஹமாஸ் இயக்கத்தைக்கூட பத்தா (Fatah)இயக்கத்துக்கு எதிராக நிதி – ஆயுத உதவி ஆயுதபயிற்சி வழங்கி  வளர்த்துவிட்டது இஸ்ரேல் தான் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 19.01.2024 அன்று EU வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் Josep Borrell, ஸ்பெயினில் உள்ள வல்லடோலிட் (University of Valladolid in Spain) பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில்,  ஹமாஸை உருவாக்குவதற்கு இஸ்ரேல் நிதியுதவி அளித்ததாகக் பகிரங்கமாகக்கூறினார். இஸ்ரேலிய உளவுத்துறையால் ஹமாஸ் உருவாக்கப்பட்டது என்பதை தனது ஆய்வில் கண்டறிந்து  நிரூபித்த ஒரு இஸ்ரேலிய பெண் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டார் என்ற விடயம் பலரும் அறிந்ததே. இவ்வாறுதான் தாலிபான்களையும் அமெரிக்கா உருவாக்கி கடைசியில் அதற் கெதிராகவே பல ஆண்டுகாலம் போராடியும் தோற்கவேண்டி யிருந்தது என்பதை இங்கு நினைவு கூறலாம்.

தொடரும்…