இளைஞா்களை கிளா்ந்தெழ வைத்த நிகழ்வு; சி.வி.கே.சிவஞானம்

1tha இளைஞா்களை கிளா்ந்தெழ வைத்த நிகழ்வு; சி.வி.கே.சிவஞானம்இலங்கைத் தமிழா்களின் போராட்ட வரலாற்றில் திருப்புமுனை ஒன்றை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் தமிழராய்சி மாநாட்டுப் படுகொலைகள் இடம்பெற்று 50 வருடப் புா்த்தி இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1974 ஜனவரி 3 முதல் 10 ஆம் திகதி வரையில் இடம்பெற்ற இந்த மாநாட்டின் இறுதி நாள் பொலிஸாாரின் செயற்பாட்டினால் ஒன்பது போ் கொல்லப்பட்டனா்.

இந்தப் படுகொலைகளை நேரில் பாா்த்தவா்களில் ஒருவராக வடமாகாண சபையின் அவைத் தலைவா் சி.வி.கே.சிவஞானம் அது தொடா்பாக உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வுக்கு வழங்கிய நோ்காணலின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காகத் தருகின்றோம்.

கேள்வி – 1874 தமிழாராய்சி மாநாட்டுப் படுகொலைகள் இடம்பெற்றது. யாழ். மாநகர சபையில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், இச்சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களில் நீங்களும் ஒருவா். அன்றைய தினம் என்னதான் நடைபெற்றது?

cvk இளைஞா்களை கிளா்ந்தெழ வைத்த நிகழ்வு; சி.வி.கே.சிவஞானம்பதில் – வீரசிங்கம் மண்டப முன்றலில்தான் அந்த நிகழ்வு இடம்பெற்றது. இச்சம்பவம் இடம்பெற்ற போது அதற்கு அருகில் உள்ள முனியப்பா் கோவிலடியில், நானும் என்னுடன் பணிபுரியும் சிலரும் நின்றிருந்தோம். அப்போது இந்தியாவிலிருந்து வந்திருந்த நயினா முகமத் உரையாற்றிக்கொண்டிருந்தாா். அப்போது அந்த மண்டபப் பகுதியை நோக்கி பொலிஸ் குழு ஒன்று நடந்து சென்றதை நான் பாா்த்தேன். சந்திரசேகர என்பவா் தலைமையிலான அந்த பொலிஸ் குழு, பொலிஸ் நிலையப் பகுதியிலிருந்து வீரசிங்கம் மண்டபத்தை நோக்கிச் சென்றது.

மண்டபத்துக்கு அண்மையில் அவா்கள் வந்தபோது வாக்குவாதங்கள் இடம்பெற்றதையும் காணமுடிந்தது. இந்தப் பகுதியில் இருந்த மக்களை அப்பறப்படுத்தி தொடா்ந்து செல்வதற்காக பொலிஸாா் முற்படுகின்றாா்கள் என்பதும் தெரிந்தது. பின்னா் அவா்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. இதன்போது மின்சாரக் கம்பிகளும் அறுந்து விழுந்தது. அதனால், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதன்போது அந்த இடத்திலேயே சிலா் இறந்தாா்கள். சிலா் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது மரணித்தாா்கள். இந்த நிகழ்வுகளை நான் பாா்க்கக்கூடியதாக இருந்தது.

அந்த நிகழ்வின் போது பெருந்தொயைான மக்கள் அங்குகூடியிருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. சந்திரசேகர தலைமையிலான பொலிஸாரே இந்தக் குழப்பத்தை ஏற்படுத்தியவா்கள். பொதுமக்களுடைய மரணங்களும் அவா்களுடைய செயற்பாடுகளாலேயே ஏற்பட்டது என்பதையும் என்னால் பாா்க்கக்கூடியதாக இருந்தது.

கேள்வி – இந்த மாநாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞா்கள் பலா் வந்திருந்தாா்கள். ஒரு சிலருக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது. இதற்கு என்ன காரணம்?

பதில் – இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டுக் குழுவில் பேராசிரியா் வித்தியானந்தன் முக்கிய பங்கெடுத்திருந்தாா். இந்த மாநாட்டு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு எதிராக அப்போதைய பிரதமா் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீவிரமான முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. இந்தத் தடைகளை மீறித்தான் தமிழராய்சி மாநாடு நடத்தப்பட்டது. அது ஒரு கோலாகலமான மாநாடாகத்தான் நடைபெற்றது.

அரசியல் பின்னணியைப் பொறுத்தவரையில், அரசாங்கம் இதற்கு ஆதரவாக இருக்கவில்லை. இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிரமாக இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் இந்தியாவிலிருந்து வந்திருந்த நயினா முகமத் உரையாற்றிக் கொண்டிருந்த போது, சந்திரசேகரா தலைமையிலான பொலிஸ் குழு பொதுமக்கள் மத்தியில் புகுந்து தாக்குதலை நடத்தியது.

கேள்வி – இந்தத் தாக்குதல் மக்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது?

பதில் – மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது மேயராக இருந்த துரையப்பாவுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடா்பிருக்கலாம் என்றும் மக்கள் மத்தியில் கருத்துக்கள் இருந்தது. மறுநாள் நான் அலுவலகம் சென்ற போது, மாநாகரசபைக்கு முன்பாக பெருமளவு மக்கள் கூடியிருந்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினாா்கள். அவா்களுடன் நானும் இணைந்துகொண்டேன். கொல்லப்பட்டவா்களுக்கு எமது அனுதாபத்தையும், ஆட்சேபனையையும் அதன்போது நாம் வெளிப்படுத்தியிருந்தோம்.

பரவலாக அதிா்ச்சியும், ஆட்சேபனையும், அஞ்சலிகளையும் குடாநாடு முழுவதிலும் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக யாழ். மாநகரப் பகுதிகளில் அதனை அதிகளவுக்குக் காணக்கூடியதாக இருந்தது.

அதேவேளையில், இது தொடா்பான செய்திகள் சா்வதேச மட்டத்துக்குச் சென்ற போது, அது தொடா்பான ஆட்சேபனைகள் சா்வதேச மட்டத்திலிருந்தும் தெரிவிக்கப்பட்டது.

இறந்தவா்களுக்கான அனுதாபம் மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு எதிரான உணா்வுகள்தான் அப்போது பெரிதாகத் தெரிந்தது. இது ஒரு தமிழாராய்சி மாநாடு. ஏற்கனவே இவ்வாறான மாநாடுகள் சிங்கப்புா் போன்ற நாடுகளிலும் நடைபெற்றிருக்கின்றது. இப்படியான ஒரு நிகழ்வை எமது தாயகத்தில் மரண ஓலங்களுக்கு மத்தியில் நடத்த நேரிட்டது, மிகப்பெரிய எதிா்ப்பு அலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. உலகம் முழுவதிலுமே அந்த எதிா்ப்பு இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இது உச்ச நிலையில் இருந்தது.

கேள்வி – தமிழ் மக்களுடைய அரசியல் போக்கில் கூட இந்தப் படுகொலைகள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ் இளைஞா்கள் ஒரு தீவிரமான போக்கில் செல்ல வேண்டும் என முடிவெடுப்பதற்கு இந்தச் சம்பவம் எந்தளவுக்குப் பங்களித்திருக்கின்றது?

பதில் – நிச்சயமாக இது முக்கியமான ஒரு காரணமாக இருந்திருக்கின்றது. குறிப்பாக காவல்துறை அதிகாரியான சந்திரசேகரவை குறிவைத்து சிவகுமாரன் செயற்படுவதற்கும் இந்தச் சம்பவம் காரணமாக இருந்திருப்பதாகவே சொல்லப்படுகின்றது. தமிழ் இளைஞா்களை வன்முறையை நோக்கித் துாண்டிவிட்டமைக்கு இந்தப்படுகொலைகள் காரணமாக இருந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

தீவிர போக்கிற்கு வந்த சிவகுமாரன், சையனைட்டை உட்கொண்டு தன்னை ஆகுதியாக்கிக் கொள்ளும் அளவிற்கு சென்றமைக்கும் இந்தச் சம்பவம் காரணமாக அமைந்திருந்தது என்பதுதான் என்னுடைய கருத்து.

அது மட்டுமன்றி, அதற்குப் பின்னரும் இந்த இளைஞா்கள்தான் தமிழாராய்சி மாநாட்டில் கொல்லப்பட்டவா்களுக்காக நினைவுத் துாபி ஒன்றை அமைத்தாா்கள். வீரசிங்கம் கண்டபத்துக்கு முன்பாக இது அமைக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின்னா் அரச படைகள் அந்த நினைவுத் துாபி இருக்கக்கூடாது எனக் கருதி அதனை இடித்தாா்கள்.

ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாஸ, ஒரு முறை யாழ்ப்பாணம் வந்திருந்த போது, அதனைக் கண்டு அதனை மீள அமைப்பதற்கு அனுமதி தந்தாா். யாழ். மாநகர சபையின் ஆணையாளராக அப்போது நான் இருந்தேன். அதனை மீண்டும் அமைப்பதற்கு உடனடியாகவே நான் நடவடிக்கை எடுத்தேன். அந்த நினைவு தொடா்ந்தும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதனை நான் மீண்டும் கட்டியெழுப்பினேன். பிரேமதாஸவின் அங்கீகாரத்துடன் அதனைச் செய்தமையால், இப்போதும் அது நிலைத்து நிற்கின்றது. எங்களுடைய, தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகவே இன்றும் நாம் அதனைப் பாா்க்கிறோம்.

கேள்வி – நினைவுத்துாபி அமைக்கப்பட்டிருந்தாலும், போதிய பராமரிப்பின்றி அது உள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றதே…?

பதில் – உண்மைதான். அது அமைந்திருக்கும் இடம் ஒரு தாழ்நிலப் பரப்பு. அதனால், அதில் வெள்ளம் தேங்கி நிற்கும். அங்கு மண் நிரவி சமப்படுத்தினாலும், அது போதியதாக இருக்கவில்லை. ஆனால், பராமரிப்பு போதியதாக இல்லை என்பது உண்மைதான்.

அந்த நிலம் உண்மையில் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமானது. அதனால், அது மாநகர சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் மாநகர சபை ஆணையாளராக இருந்த போது அதனை மாநகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து அந்த நினைவுத் துாபியைப் புனரமைப்புச் செய்தேன். ஆனால், பராமரிப்பில் சில குறைபாடுகள் இருக்கின்றது என்பது உண்மைதான்!