ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் இம்மாதம் நாட்டுக்கு வருகைதருவதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், அவ்வாறு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும், தங்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் உயர்ஸ்தானிகரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருக்கும் நிலையில், வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளில் ஒரு தரப்பினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக இலங்கைக்கு வருகை தரவேண்டாம் எனக்கோரி உயர்ஸ்தானிகருக்கு ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
இந்தநிலையில் அவர் இலங்கைக்கு வருகை தரும் பட்சத்தில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யுமாறும், பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அனுப்பி வைத்திருக்கும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
‘வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினராகிய நாம் நீதிகோரி சுமார் 3000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம்’.
‘அது யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் அரச படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் உண்மையையும் அதற்குரிய பொறுப்புக்கூறலையும் கோருகின்ற எமது இயலாமையின் வெளிப்பாடாகும்’.
பல ஆண்டுகளாக இப்போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் அதற்குரிய பதிலோ அல்லது நீதியோ கிட்டாமலே உயிரிழந்துவிட்டனர். உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதே எப்போதைக்குமான எமது அசைக்கமுடியாத இலக்காக இருந்திருக்கின்றது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.