நடத்துனர்களின் மோசடிகளால் இலங்கை போக்குவரத்துச் சபை நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் ரூபாயை இழந்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகமேலும் தெரிவிக்கையில்,
இந்த பாரிய நிதி இழப்பை ‘பொது நிதி கசிவு’ என அடையாளப்படுத்திய அமைச்சர், பேருந்து சேவைகள் மட்டுமன்றி, இலங்கை போக்குவரத்துசபையின் மனிதவளக் கட்டமைப்பு உள்ளிட்ட முழு நிர்வாகமுமே மோசடிக்குள்ளாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நாங்கள் இலங்கை போக்குவரத்துச் சபையைவிற்க மாட்டோம். நாங்கள் அதை மேம்படுத்துவோம்,” என்ற அவரின்அறிவித்தலின் மூலமாக இலங்கை போக்குவரத்துச் சபை தனியார்மயப்படுத்தப்படாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியாக வாக்களித்துள்ளார்.
பொறுப்புடைமையையும் செயல்திறனையும் மீட்டெடுப்பதற்காக விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
புதிய தரநிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள விரும்பாத அதிகாரிகளும் ஊழியர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் இதன்போதுஎச்சரித்துள்ளார்.
மேலும் ஊழலுக்கு எதிராக எவ்வித சமரசமும் இன்றி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இலங்கை போக்குவரத்துச் சபையை ஒரு இலாபகரமான மற்றும் வினைத்திறன் மிக்க பொதுச் சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



