இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவு தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு, இலங்கை தொடர்பான மையக்குழுவின் உறுப்பு நாடுகளான பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஆதரவை வழங்கவுள்ளன.
இதன்படி இலங்கைக்கான பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசமும் நீடிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம், இலங்கையில் மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு, சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகள் உட்பட, தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும், சான்று சேகரிக்கும் பொறிமுறையாகவும் அது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த புதிய தீர்மானம், இலங்கை அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை ஏற்றுக்கொள்கிறது. நாட்டில் பல தசாப்தங்களாக நிலவும் பிளவுபடுத்தும் இனவெறி அரசியல் மற்றும் இன மோதல்களின் விளைவாக ஏற்பட்ட தீங்குகள் மற்றும் துன்பங்களை ஒப்புக்கொள்வதையும் இந்த தீர்மானம் ஏற்கிறது.
அதேநேரத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியதன் அவசரத் தேவையையும், அது வலியுறுத்துகிறது. இலங்கையில் பல மனித புதைகுழி தளங்களை அடையாளம் காண்பது குறித்தும், போதுமான வளங்களுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
அதேநேரம் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் சுயாதீனமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் இந்தத் தீர்மானம் கோருகிறது. சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப அகழ்வுகளை நடத்துவதற்கு போதுமான நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களை உறுதி செய்வதற்கு சர்வதேச ஆதரவை முன்கூட்டியே பெறவும் இது வழிவகுக்கிறது.
அத்துடன், மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து, வழக்குத் தொடரும்போது திறன்களை வலுப்படுத்த சர்வதேச உதவியை நாடவும் இந்த தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
ஒரு சுயாதீனமான பொது வழக்கு தொடுநர் அமைப்பை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, இந்த தீர்மானம் பாராட்டி ஒப்புக்கொள்கிறது. அதே நேரத்தில் இது முற்றிலும் சுயாதீனமாகவும், பயனுள்ளதாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது,
அத்துடன், ஏற்கனவே பல தசாப்தங்களில் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில், ஒரு சுயாதீனமான சிறப்பு ஆலோசகரைக் கொண்ட ஒரு நீதித்துறை பொறிமுறையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க, இலங்கை அரசாங்கத்தை இந்த தீர்மானம் ஊக்குவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.