இலங்கை தமிழரசு கட்சி,சஜித்திற்கு ஆதரவு: கட்சியின் மத்திய குழுவுக்குள் பிளவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது. எனினும், தீர்மானம் எடுக்கப்பட்டபோது மத்திய குழுவில் 18 பேர் மாத்திரமே சமூகளமளித்திருந்ததாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று இரவு ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இதனால் தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் செல்லுபடியற்றது எனவும் மாவை சேனாதிராஜா கூறியிருக்கிறார்.

மேலும் குறித்த தீர்மானம் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியானது ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது.

குறித்த தீர்மானம் தொடர்பில் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார். அதேவேளை,இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம்  தெரிவித்ததாவது,

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்து கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள். மாவை சேனாதிராஜா அவர்களுக்கும் அறிவித்து அவரும் வருவதாக இருந்தார். உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.

மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது. மத்திய குழுவின் தீர்மானம் தான் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அதரவு வழங்குவது என்பது. அதனையே அறிவித்தோம். எதிர்வரும் 4 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு. அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது.  மூத்த துணைத்தலைலவர் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து மாவை சேனாதிராஜா அவர்களுடன் கதைப்பார். என்றார்.

இந்த நிலையில் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் தொடர்பாகக் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.