இலங்கை ஜனாதிபதி தேர்தல்: அனைத்து மாவட்டங்களிலும் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்

IMG 3137 இலங்கை ஜனாதிபதி தேர்தல்: அனைத்து மாவட்டங்களிலும் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலானது இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 492,280 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 511 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மன்னார் தேர்தல் தொகுதி

மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மலையகம்

நுவரெலியா மாவட்டத்தில்  6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கொத்மலை தேர்தல் தொகுதியில் 88,219  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11  வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 8,500 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்  காவல்துறையினரும் 1,748 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர்  மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர்.

அம்பாறை

அம்பாறை,பொத்துவில் , சம்மாந்துறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்  வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வாக்கு சாவடிகளுக்கு   காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

528  வாக்களிப்பு நிலையங்களில்  555,432  வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள்  அரசியல் கட்சிகளாகவும்  பல சுயேட்சைகளாகவும்  களமிறங்கி உள்ளனர்.

இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830   பேரும் சம்மாந்துறை  தேர்தல் தொகுதியில் 99,727  பேரும் பொத்துவில்  தேர்தல் தொகுதியில் 184,653  பேரும்  அம்பாறை   தேர்தல் தொகுதியில் 188,222 பேரும்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளனஅத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும்  தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும்  தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.