ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 60-1 தீர்மானம், இலங்கை தொடர்பான சர்வதேச கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சி களில் நிலவும் முரண்பாடுகளைத் தெளி வாகப் பிரதிபலிக்கிறது. இத்தீர்மானம் ஒருபுறம் இலங் கைக்கு சர்வதேச அழுத்தத்தைத் தக்கவைத்து ள்ள போதும், மறுபுறம் பாதிக்கப்பட்ட வர்களின் நீண்டகால நீதிக் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வலுவானதாக இல்லை.
இந்தத் தீர்மானம், இதற்கு முந்தைய, குறிப்பாக 2015ஆம் ஆண்டின் 30-1 தீர்மானத்துடன் ஒப்பிடும்போது, தீவிரத் தன்மையில் பலவீனமாக உள்ளது. 30-1 தீர்மானம், வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால், 60-1 தீர்மானம் ஒரு சுயாதீன உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உரு வாக்க மட்டுமே வலியுறுத்தியதுடன், அதில் வெளிநாட்டு நிபுணர்களின் பங்கேற்பை கட்டாயப் படுத்தவில்லை. இந்த நீர்த்துப்போன தன்மைக்கு முக்கியமாக இரண்டு காரணிகள் பங்களித்தன:
அதில் முதலாவது, இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை வாக்குறுதியாகும். அதா வது, இலங்கை அரசாங்கம் ஆட்சிக்குப் புதிய வர்களாக இருந்து கொண்டு பொறுப்புக்கூறல் பிரச்சினைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் தீர்வு காணப்படும் என்று அளித்த வாக்குறுதி, வெளிநாட்டுத் தலையீடுகளைக் கோரும் கடு மையான பொறிமுறைகள் தீர்மானத்தில் சேர்க் கப்படுவதைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றது.
இரண்டாவது, இராஜதந்திர சமரசங்களா கும். குறிப்பாக, அமெரிக்கா ஐ.நா. மனித உரி மைகள் பேரவையில் இருந்து வெளியேறிய சூழலில், இத்தீர்மானத்தை வெற்றிகரமாக நிறை வேற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த பிரிட்டன் மற்றும் கனடா போன்ற இணை அனுசரணை நாடுகள், இராஜதந்திர ரீதியில் பல விட்டுக்கொடுப்புகளுக்கும் சமரசங்களுக்கும் உட்பட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் பட்டிருந்தன.
விசேடமாக புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் வரைவில் மூன்று முறை மாற்றங்கள் செய்யப்பட்டு, மிகக் கடுமையாகக் காணப்பட்ட அற்பசொற்ப விடயங்க ளும் நீக்கப்பட்டன.
இதன் விளைவாகவே, தீர்மானம் நீதியை யும் பொறுப்புக்கூறலையும் எதிர்பார்த்து நிற்கும் தமிழ்த் தரப்பினருக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருப்பதோடு நிரந்தரமான நல்லிணக்கத்திற் கான பலமான அடிப்படையை இது கொண் டிருக்கவில்லை என்றும் நேரடியாகவே வெளிப் படுத்துவதற்கு வித்திட்டுள்ளது.
இதேவேளை, தீர்மானம் அதன் உள்ளடக் கத்தில் பலவீனமாக இருந்தாலும், இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி முக்கியமான ஒரு விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஆணை மேலும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் சீனா, கியூபா, எதி யோப்பியா போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து, இச்செயற்திட்டத்தை ஒரு நிதியை வீணடிக்கும் செயற்பாடு என்று கடுமையாக விமர்சித்தது.
எனினும், இத்தீர்மானம் 51-1 தீர்மா னத்தின் ஆணையைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவதன் மூலம், மறைமுகமாக இந்தச் செயற்திட்டத்தின் ஆணையைப் புதுப்பித்தது. இந்த நீடிப்பு, போர்க்குற்றங்கள் தொடர் பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அழிக் கப்படுவதற்கோ அல்லது செயலிழப் பதற்கோ இருந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்துவதில் பிரித் தானியாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகள் கண்காணிப்பு நிலையில் இருந்து விடுபடும்போது சான்றா தாரங்கள் அழிந்து போகும் துரதிஸ்டமான நிலை நிகழக்கூடும் என்ற அச்சம் வெளிப்படுத்திய ஐ.நாவுக்கான பிரித்தானிய தூதுவர் குமார் ஐயர், நீதிக்காகப் போராடி காலமான மருத்துவர் மனோ கரன் பற்றிய உணர்வுப்பூர்வமான விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அவர், நீதியைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சிகள் அவசரமானவை, அவசி யமானவை என்று பேரவையில் வலியுறுத் தியமை, தீர்மானத்தை இடைநிறுத்த கோரியிருந்த இலங்கையின் கோரிக்கையை வலுவிழக்கச் செய்தது. இந்த ஆணை நீடிப்பு, இலங்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.நா. உயர்ஸ் தானிகர் அலுவலகத்தின் தொடர்ச்சியான கண் காணிப்பில் வைத்திருப்பதற்கான வழியை உரு வாக்கியுள்ளது.
அதேநேரம், ஐ.நா.தீர்மான விடயத்தில் இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்த முரண்பட்ட நிலைப்பாடு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அவ்விதமான முரண்பட்ட நிலைப்பாட்டை இராஜதந்திர நகர்வென்று அரசாங்கம் கூறுகின்றமை வேடிக்கையானது.
ஐ.நா தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அதன் உள்ளடக்கங்களை தாம் நிராகரிப்பதாக ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க உத்தியோக பூர்வமாக அறிவித்தார். மறுபுறம், அதனைத் தோற்கடிப் பதற்காக வாக்கெடுப்பை கோரவோ அல்லது நட்பு நாடுகள் மூலம் வாக்கெடுப்பை கோரவோ அவர் முனைந்திருக்கவில்லை.
ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்த அரசாங்கம், வாக்கெடுப்பைக் கோராமல் அதனை நிறைவேற அனுமதித்தது, அதன் வெளியுறவுக் கொள்கையில் உள்ள குழப்பத்தை தெளிவாகக்காண்பிப்பதாக தயான் ஜயத்திலக போன்ற விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆனால், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், வாக்கெடுப்பைக் கோரினாலும் தோல்வி யடைவோம் என்று தெரிந்து கொண்டே, ஏன் மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அளித்த விளக்கம், அரசாங்கத்தின் சர்வதேச அரசியல் ரீதியான பின் னடைவை அம்பலமாக்கியுள்ளது.
அதுமட்டுமன்றி, ஜே.வி.பி.தலைமையி லான அரசாங்கம் தனது வழங்கமான சித்தாந்தத்தில் இருந்தவாறு, சர்வதேச தலையீடுகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் அதற்குத் தலை வணங்கியுள்ளமை அதன் இரட்டை முகத்தை வெளிப்படுத்துகின்றது.
இதானால் தற்போது தென்னிலங்கையில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுக்காகப் படை யினரைக் காட்டிக் கொடுப்பதாக சிங்களத் தேசிய வாத சக்திகள் பிரசாரம் செய்வதற்கான சூழலுக்கு வழிகோலியுள்ளது.
எவ்வாறாயினனும், ஐ.நா.வில் நிறைவேற் றப்பட்ட தற்போதைய தீர்மானம் தற் போதைக்கு கடுமையான சர்வதேச தலையீட்டைத் தவிர்க்க உதவியிருந்தாலும், இதுவொரு தற்காலிகத் தளர்வு தான் எனக் கொள்ள முடியும்.
குறிப்பாக, அரசாங்கம் உள்நாட்டுப் பொறி முறைகள் மூலம் தீர்வு காண்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டா யத்தில் உள்ளது. கடந்த காலங்களில், அரசாங்கங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறியபோதே, சர்வதேச அழுத்தங்கள் தீவிரமடைந்து, சர்வ தேச விசாரணைப் பொறிமுறைகளுக்கான கோரிக் கைகள் வலுப்பெற்றன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவ சுட்டிக்காட்டுகிறார்.
அரசாங்கம் தற்போது உண்மையைக் கண் டறி வதற்கான உள்ளகப் பொறிமுறையை வலுப் படுத்துவது, செம்மணி மனிதப் புதைகுழி போன்ற விவகாரங்களில் சர்வதேச நியமங்களுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்வது, காணாமல் போனோர் அலுவலகத்தின் சுயாதீனமான இயங்கு கையை உறுதிப்படுத்துவது போன்ற நம்பிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் அரசாங்கத்தின் ‘அரசியல் இயலுமை’ சாதகமான சமிக்ஞைகளை வெளிப் படுத்தவில்லை.
ஆகவே, இலங்கை அரசாங்கம் எதிர்க்கின்ற தீர்மானம் என்பதற்காக இதனை ஜெனிவாவில் தமிழர்கள் அடைந்த வெற்றி என்றும் பாதிக் கப்பட்டவர்களுக்கு சாதகமானது என்றும் கொண் டாட முடியாது.
பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் எதிர்பார்ப் பது, நீதியையும் பொறுப்புக்கூறலையும் தான். அதுதான் நிலையான நல்லிணக்கத்தையும் நிரந்தர மான அமைதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் அதனை நோக்கி தற்போதைய தீர்மானம் நகர்வதற்காக ஒரு அடியைக்கூட முன்நோக்கி வைத்திருக்கவில்லை என்பது பெருந்தோல்வியே.