இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிடுவதன் பன்னாட்டு முக்கியத்துவம் என்ன?: தோழர் தியாகு

PHOTO 2024 09 04 14 28 48 1 இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிடுவதன் பன்னாட்டு முக்கியத்துவம் என்ன?: தோழர் தியாகு

தெற்காசியப் புவிசார் அரசியலில்  அனைவருக்கும் இந்தியா சட்டாம் பிள்ளையாக நடந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. தமிழினவழிப்பு நடந்துள்ளது என்ற உண்மையைக் கூட அறிந்தேற்காமலும், ஐநா மன்றத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக நிலையெடுக்காமலும் தமிழ்த் தலைமைகளை ஆட்டிப் படைத்து தமிழ் மக்களைப் பகடைகளாக உருட்டும் இந்திய வல்லரசின் கூடாப் போக்குக்குத் தமிழீழ மக்கள் அமைதியாகவும் சிறிலங்காவின் சட்டத்துக்கு உட்பட்டும் அளித்துள்ள விடைதான் தமிழ்ப் பொது வேட்பாளர். தமிழ்மக்களுக்கு இந்தியாவின் ஆதரவும் உதவியும் தேவை என்ற கூற்று இந்தியாவுக்குத் தமிழ்மக்களின் பரிவு தேவை என்பதை மறுப்பதாகி விடக் கூடாது. தமிழ்மக்கள் தமக்கான நீதியும் உரிமையும் கருதித் தாமே முடிவெடுத்துக் கொள்வார்கள் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இந்திய வல்லரசு என்ன சொன்னாலும் தமிழர்கள் கேட்டு நடப்பார்கள் என்ற எண்ணத்தை இந்தியா கைவிட வேண்டும். தமிழர்களிடம் தனக்கு செல்வாக்கு வேண்டும் என்று இந்தியா கருதினால் அது அவர்களின் கோரிக்கைகளுக்குத் தெளிவான ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் மறுதலித்து விட்ட உதவாக்கரைத் தீர்வுகளை அவர்கள் மீது திணிக்க முயல்வதைக் கைவிட வேண்டும்.

அனுரகுமாரோடு இந்தியா ஒரு கட்டத்தில் பேசிப் பார்த்தது. அது பலிக்கவில்லை. இரணில் சீனத்தின் பக்கம் என்று பார்க்கப்படுவதால் அவரையும் ஆதரிக்க முடியாது. ’அறகலயா’ போராட்டத்துக்குப் பின் இராசபட்சே குடும்பம் மீண்டெழ வழி இல்லை. சஜித் பிரேமதாசாதான் மிச்சம். அவருக்

குத் தமிழர் வாக்குகளைப் பெற்றுத்தர சுமந்திரன் வகையறாவைக் கைக்கருவியாக்கிக் கொள்வது இந்திய வல்லரசின் முயற்சி. தமிழ்ப் பொது வேட்பாளர் பெருமளவில் தமிழர் வாக்குகளைப் பெற்றுக் கொண்டால் இந்தியா இரு தரப்பிலும் தனிமைப்படும். மாலத்தீவு, வங்காள தேசம், நேபாளம் என்ற வரிசையில் இலங்கைத் தீவிலும் இந்தியாவுக்கு இது போதாத காலம்.

தமிழினவழிப்பில் சிங்களப் பேரினவாதத்துக்குத் துணை போன இந்திய வல்லரசு அம்மக்களின் ஈடுசெய் நீதிக்கான போராட் டத்திலும் எதிர்நிலை எடுத்து விட்டுத் தமிழர்கள் இந்தியாவின் சொல்படிக் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி, சிறையில் அடைபட்டிருக்கும் போர்க் கைதிகள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு விடுதலை, தமிழர் தாயகத்திலிருந்து சிங்களப் படை நீக்கம், வன்பறிப்பு நீக்கி நிலவுரிமை மீட்பு, குடியாட்சிய அரசியல் தீர்வு… இந்தக் கோரிக்கைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் வரலாற்றின் புதைகுழியிலிருந்து 13ஆம் திருத்தச் சட்டத்தைத் தூக்கி வந்து ’மோடி’ வித்தை காட்ட முற்பட்டால் தமிழ்மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று ’சம்பந்த’ப்பட்ட சகலருக்கும் அறிவித்துக் கொள்வதுதான் தமிழ்ப் பொதுவேட்பாளர் களங் கண்டிருப்பதாகும்.

இருதுருவ உலகம் ஒருதுருவ உலகமாகி மீண்டும் பலதுருவ உலகமாகி விட்டது என்று பன்னாட்டுச் சூழலுக்கு விளக்கம் தரப்படுகிறது. இந்தப் பலதுருவம் என்பது அமெரிக்கா, சீனம், உருசியம், ஐரோப்பா, (தெற்காசியாவைப் பொறுத்த வரை) இந்தியா என்றுதான் விளக்கப்படுகிறது. ஆனால் பன்னாட்டு அரசியலில் உலகெங்கும் நடைபெறும் தேசிய விடுதலைக்கும் குடியாட்சியத்துக்கும் குமுக முன்னேற்றத்துக்குமான இயக்கங்களும் அரசுகளற்ற தேசங்களும் கொண்டுள்ள வகிபாகத்தைத் தமிழ்ப் பொதுவேட்பாளர் உணர்த்தி நிற்கின்றார். வல்லரசுகளின் படை வலிமை, பொருள் வலிமை, சூழ்ச்சி வலிமை… இதற்கெல்லாம் முகங்கொடுக்கும் அறவலிமை அரசுகளற்ற தேசங்களுக்கு உண்டு. தாயக மீட்புக்கான பாலத்தீன மக்களின் வீரப் போர் உலக அரசியலில் ஒரு தீர்மானிக்கும் அற ஆற்றலாக வளர்ந்து வருகிறது. இவ்வகை அறம்சார் அரசியல் ஆற்றலின் பெயராளர்தாம் தமிழ்ப் பொது வேட்பாளர்.

இனவழிப்பினால் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கி விட முடியவில்லை. எழுக தமிழ், பொத்துவில் பொலிகண்டி, அதன்  தொடர்ச்சியாகத்தான் இப்போது தமிழ்ப்பொது வேட்பாளர் களம் கண்டுள்ளார்… உலகத்தின் முன்னோடிப் போராட்டக் களங்களில் பாலத்தீனம், குர்திஸ்தானம், காசுமீரம் போல் தமிழீழத்துக்கும் இடம் உண்டு என்ற திசையில் ஒரு புதுமையான நகர்வுதான் தமிழ்ப் பொதுவேட்பாளரும், அவருக்கான தேர்தல் அறிக்கையும்!