இலங்கையர்கள் மற்றும் இலங்கை வரும் ஏனைய நாட்டவர்களின் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு வலுவானதாக இருக்கும். அறுகம் குடா சம்பவத்தை போன்று கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அரசாங்கத்துடன் இணைந்து உறுதுணையாக செயல்படும் என அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அறுகம் குடா பகுதியில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சுறுத்தல் குறைவடைந்த நிலையில், உடனடியாக பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.
எனினும் ஈரான் புரட்சிகர காவல் படையினை இணைந்து செயல்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜையான பர்ஹாத் ஷகேரி குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த அமெரிக்க நீதிமன்றம், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மீதான கொலை சதி உள்ளிட்ட மேலும் இரு சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணைகளின் முன்னேற்றத்தில் கிடைக்கப்பெற்றன.
அமெரிக்க பாதுகாப்பு தரப்பினரிடம் சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரமே இலங்கையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்கதல் நடத்தும் திட்டம் கண்டறியப்பட்டது. அடுத்த கட்டமாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் ஊடாக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்றங்களின் அடிப்படையில் அறுகம் குடா குறித்து அக்டோபர் மாதம் 23ஆம் திகதி வெளியிட்ட பயண எச்சரிக்கையை அமெரிக்க தூதரகம் விலக்கிக் கொண்டுள்ளது. அமெரிக்க பிரஜைகள் அனைவரும் இலங்கைக்கான பயண எச்சரிக்கையை மீளாய்வு செய்ய வேண்டும்.
தங்கியிருக்கும் சுற்றுச்சூழல் குறித்து தெரிந்து சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தால் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
இலங்கையர்கள் மற்றும் இலங்கை வரும் ஏனைய நாட்டவர்களின் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு வலுவானதாக இருக்கும். இத்தகைய கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அரசாங்கத்துடன் இணைந்து உறுதுணையாக செயற்படும் என்று தெரிவித்தார்.