இலங்கையில் வருடாந்தம்  33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள்!

இலங்கையில் வருடாந்தம்  33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் புற்று நோயால் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டில் புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருகப்கிடையில் சமீபத்தில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற  கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செயல்படுத்தப்பட வேண்டிய எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த எடுக்கக்கூடிய அவசர நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது. மேலும் புற்றுநோய்கான மருந்துகள் மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்துவது குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக புற்றுநோய்க்கான சிகிச்சை சேவைகள் உள்ளன. புற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது.

அதே நேரத்தில் தேசிய மற்றும் சர்வதேச ஆதரவையும் பெறு எதிர்பார்த்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கான ஆரம்பிக்கப்பட்ட சுகாதார கல்வித் திட்டங்களை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் வருடாந்தம்  33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்படுகின்றனர்.

அவ்வாறு பதிவாகும் பெரும்பாலான புற்றுநோயாளர்கள் வாய் மற்றும் கழுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், மார்பகப் புற்றுநோய் பெண்களிடையே மரண வீீதம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்றார்.