நாட்டில் அதிகரித்துள்ள சனத்தொகைக்கு ஏற்றவாறு, நாடளாவியரீதியில் ஆயர்வேத, சித்த மற்றும் யுனானி ஆகிய சுதேசவைத்திய பணியிடங்களை விஸ்தரிப்புச்செய்வதுடன், நாடளாவியரீதியில் சுதேசவைத்திய அதிகாரிகளின் நியமனங்களையும் அதிகரிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றில் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.
அதேவேளை நாட்டின் சனத்தொகையின் அடிப்படையில் சுதேசவைத்திய பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டால், 4,682சுதேச வைத்திய அதிகாரிகளும், 2,341 சுதேச C.M.O அதிகாரிகளுமாக நாடளாவிய ரீதியில் மொத்தம் 7,023சுதேச வைத்திய அதிகாரிகளை நியமஞ்செய்ய முடியுமெனவும் தெரிவித்தார். இதன்மூலம் நாட்டின் சுகாதார சேவையினை மேம்படுத்த முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
நாடாளுமன்றில் 18.06.2025 நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் சுதேச வைத்தியக்கல்வியைப் பூர்த்தி செய்து வைத்தியர் தகுதியினைப்பெற்ற பல சுதேசவைத்தியர்கள் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்றனர். அவை எமதுமக்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டுடன் இணைந்த வளர்ச்சியினாலும் சுகாதாரசேவைக்கான தேவைகளினாலும் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றது. எமது சித்த, ஆயர்வேத மற்றும் யுனானி மருத்துவங்கள் எமது நாட்டின் கிராமப்புறங்களிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிக்காணப்படும் பகுதிகளிலும், மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நிலையான மிகப்பெரும் பங்கை வகிக்கின்றன. எனினும் அரச சுதேசவைத்தியர் அதிகாரிகள் நியமனங்களின் பற்றாக்குறையினால் இவர்களது தேவை காணப்படுகின்ற சமூகங்களுக்கு சேவைசெய்ய முடியாத நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
சுதேச வைத்தியமானது எமது நாட்டின் சுகாதாரசேவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றபோதிலும், ஐந்து வருட தொழில்சார் சுதேசமருத்துவக்கல்வி மற்றும் அதனைத் தொடர்ந்து ஒருவருட உள்ளகப்பயிற்சி போன்றவற்றை நிறைவுசெய்தும் நாடளாவிய ரீதியில் தொழில்வெற்றிடங்கள் இருந்தும் கடந்தகால அரசாங்கங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யாமலும், மற்றும் நியமனங்களில் அக்கறை செலுத்தாமை போன்ற காரணங்களால் சுதேசவைத்தியர்களின் தொழில்வாய்ப்புக்கள் நிறுத்தப்பட்டு நியமனங்களுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு சென்றது. அவ்வாறு இருக்கையில் உயர்கல்வி அமைச்சானது இந்த சுதேசவைத்திய கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்ததின் காரணமாக கடந்த ஐந்து வருடங்களில் கல்விகற்று வெளியேறிய மாணவர்களின் எண்ணிக்கை 25 தொடக்கம் 50இலிருந்து 120 தொடக்கம் 200 ஆக உயர்வு பெற்றது.
இதனால் வேலைவாய்ப்பின்றிக் காணப்படும் வைத்தியர்களின் எண்ணிக்கை மேலும் கணிசமானஅளவு அதிகரித்துள்ளதுடன், வேலையற்ற சுதேசவைத்தியர்கள் பலதரப்பட்ட இன்னல்களையும் எதிர்நோக்குகின்றார்கள். அவையாவன
நிதி நிலையற்ற தன்மை மற்றும் பலவருடக்கல்வி, மருத்துவப்பயிற்சிகள் பயனற்றுப்போதல்.
தாம் வாழும் சமூகத்துக்கு, குறிப்பாக புறநகர் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு சேவை வழங்க இயலாமை.
தொழில்சார் தகுதிகள் இருந்தும் வேலையற்ற தன்மையின் காரணமாக உளவியல் ரீதியான பாதிப்புக்கள் மற்றும் சமூகத்தினரால் ஏற்படுத்தப்படும் களங்கங்கள் மற்றும் தற்போது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதீடு பரிந்துரைப்பில் 2720 சுதேசவைத்தியர்களின் நியமனங்கள் பற்றி குறிப்பிட்டுள்ள போதிலும் அடுத்த ஆண்டு ஜனவரி ஆகும் போது வேலையற்ற சுதேச வைத்தியர்களின் எண்ணிக்கையானது 2785 ஆகும்.
அந்தவகையில் வேலையற்ற சுதேசவைத்தியர்களின் எண்ணிக்கை 2062ஆக்காணப்படுகின்றது. உள்ளகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சுதேச வைத்தியர்கள் 360ஆகும். இதனைவிட 363 சுதேசவைத்தியர்கள், 2026இல் உள்ளகப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும் எமது நாட்டில் அதிகரித்துவரும் குடிமக்களின் எண்ணிக்கைக்கு அமைவாக சுதேசவைத்தியர்களின் நியமனங்களின் எண்ணிக்கையினையும் அதிகரிக்க வேண்டியநிலை காணப்படுகின்றது. அதனடிப்படையில் சுமார் 7023புதிய நியமனங்களை மேற்கொண்டு நாட்டின் சுகாதார சேவையினை மேம்படுத்த உதவுமாறு முன்மொழிகின்றேன். இந்த எண்ணிக்கையானது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சனத்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நான் முன்வைக்கின்றேன்.
நாட்டின் சனத்தொகையின் அடிப்படையில் சித்த, ஆயர்வேத மற்றும் யுனானி மருத்துவ அதிகாரிகளின் பணியிடங்களை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரத்துக்கான வேண்டுகோளாக முன்வைக்கின்றேன்.
2025 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில் எமது நாட்டின் மக்கள் தொகை அதிகரித்துள்ளமையை நாம் காணமுடியும். மற்றும் இந்த சித்த, ஆயர்வேத மற்றும் யுனானி ஆகிய சுதேச மருத்துவங்கள் எமது மக்கள் மத்தியில் இலகுவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய வகையிலும் முழுமையான மற்றும் பண்பாடு ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவதில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன.
எனினும் தற்போது நியமனத்திலுள்ள மற்றும் நியமிக்கப்படவுள்ள சுதேசவைத்திய அதிகாரிகளின் எண்ணிக்கையானது நாட்டின் சுதேச சுகாதாரத்தேவைகளுள் முழுமையாக வழங்குவதற்கு போதாதநிலையில் காணப்படுகின்றது. சனத்தொகை அதிகரிப்பு மற்றும் சுகாதாரத் தேவைகளையும் கருத்தில் கொண்டு இத்துறையிலுள்ள மருத்துவ அதிகாரிகளின் பணியிடங்களை அதிகரிக்க தங்களது மேலான கவனத்தினை அன்புடன் கோருகின்றேன் . இது சிறந்த சுகாதார முறைமையினையும், திறனான சேவையினைத் தொடர்ச்சியாக மக்களுக்கு வழங்க உதவும்.
அரச புள்ளிவிபரப்படி மாவட்டரீதியாக 25மாவட்டங்களிலும் 23411000 மக்ககள்தொகை காணப்படுகின்றது.
அந்தவகையில் குறித்த மக்கள்தொகைக்கு ஏற்றவாறு கடமையாற்றுவதற்கு சுதேசவைத்திய அதிகாரிகள் 4,682பேர் தேவைப்படுவார்கள் என எதிர்பார்க்கமுடிகின்றது. அத்தோடு 2,341 c.m.oஅதிகாரிகளின் தேவையும் ஏற்படுமென எதிர்பார்கமுடிகின்றது. அந்தவகையில் சநாடளாவியரீதியில் சுதேச வைத்தியத்துறையில் மொத்தம் 7023 புதிய பதவிகளை உருவாக்கவேண்டும்.
எமது நாட்டில் சுகாதாரத்துறையில் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாதிருக்க சில பரிந்துரைப்புக்களை முன்வைக்கின்றேன்.
நாட்டின் சனத்தொகைக்கேற்றவகையில் வைத்திய அதிகாரிகளின் பதவி வெற்றிடங்களை அதிகரித்தல்.
சுதேச வைத்திய கற்கைநெறிக்காகப் பல்கலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் அல்லது மட்டுப்படுத்தல். ஏன் எனில் பல்கலைக்கழகபீடங்கள் மற்றும், வைத்தியசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிற்கே வளங்கள் காணப்படுவதன்காரணமாக அதிகமான மாணவர்கள் கற்பதற்குரிய எந்தவொருசூழலும் இல்லை. இதனைவிட கல்வித்தரம் மற்றும், மருத்துவஅறிவுகளின் தரம் ஆகியன குறைவடைதல். அத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு உள்ளிட்ட சிக்கல் நிலமைகள் காணப்படுகின்றன.
கடந்த 2007 க.பொ.த உயர்தர ஆண்டு மாணவர்கள் தொடக்கம் தற்பொழுதுவரை 2400இற்கும் மேற்பட்ட வேலையற்ற சுதேச வைத்தியர்கள் காணப்படுகின்றார்கள். ஆனால் அண்ணளவாக 700சுதேச வைத்தியர்களே 2024ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டுகளில் நியமனங்கள் பெற்றுள்ளனர்.
சுதேசமருத்துவமானது, இயற்கையை மையப்படுத்தியதாகவும், ஆழமான புரிந்துணர்வுடனும் மாத்திரமே கற்கமுடியும். மாறாக பாரிய அளவிலான கல்வி மாதிரி மூலமாக அடையமுடியாது. இதனால் பாரம்பரிய வைத்திய அறிவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்நிலைசெலவாணியை நாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி வியாபாரத்தினை ஊக்குவிக்கும் வகையிலான சுதேசமருத்துவச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்.
எனவே எமது நாட்டின் சுகாதாரசேவையில் பெரும் பங்கைவகிக்கும் சுதேசமருத்துவ சேவையினை எதிர்காலத்தில் தங்கு தடையின்றி நடாத்துவதற்கும் வேலையற்றுக் காணப்படுகின்ற சுதேச மருத்துவர்களுக்கான தொழில் நியமனங்களை வழங்குவதற்கும் இனிவரும் காலங்களில் உள்ளகப் பயிற்சிகளை நிறைவுசெய்து வெளியேறும் சுதேச வைத்தியர்களுக்கான பதவி நியமனங்களை தாமதிக்காது உடனடியாக வழங்குவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலான புதிய மற்றும் நவீனபொறிமுறைகளை அமுல்படுத்தவும் தங்களின் மேலான ஆதரவினைக் கோருகின்றேன் – என்றார்.