இலங்கையில் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்கள் காணாமல் போனவர்களை நினைவு கூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தித் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மே 18ம் திகதி 2009இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என கடந்த 17ம் திகதி ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது எனத் தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன் பியர்சன், இதன்காரணமாக உண்மை நீதி இழப்பீடு போன்றவற்றை வழங்குவதற்கு பதில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகத்தினரையும் மௌனமாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் மேலும் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்பது புலனாகின்றதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.