இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகின்ற போதிலும் பல இலங்கையர்கள் இன்னும் சிரமப்படுகிறார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேர்மறையான வளர்ச்சி மற்றும் நிதி செயல்திறன் இருந்த போதிலும் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடும்ப வருமானம், வேலை வாய்ப்பு மற்றும் நலன்புரி என்பன இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைக்கு முன்னர் காணப்பட்டதை விடவும் குறைவாகவே உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் வறுமை 2024இல் 24.5 சதவீதம் என்பன ஆபத்தான மட்டத்தை அடைந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழிலாளர் சந்தை தொடர்ந்தும் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுவதுடன் அதனால் மக்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை தேடும் அளவு அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாக மீண்டும் வருகின்ற அதேவேளை மொத்த மக்கள் தொகையில் கணிசமான அளவினர் வறுமையில் உள்ளனர் அல்லது வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர் என்று உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கையில் இடம்பெறும் மீட்சி நடவடிக்கைகள் அனைவருக்கும் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.