இலங்கையில் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவருதல் தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்பதாக பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது குறித்த பல்வேறு கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முதலாம் கட்டமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நிறுவனங்களின் கடமைகளை ஆரம்பிக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனியார் நிறுவனங்களின் கடமைகளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்குமாறும் குறிப்பிட்ட ஊழியர்களை கடமைகளுக்கு அமர்த்துமாறும் நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் பணிகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை 11 ஆம் தேதி நாடு இயல்பான நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் போது தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபை தயாராக உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படி இந்த திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் செயற்பாடுகளை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்துறை ஆணையாளர் நாயகம் நதுன் குருகே தெரிவித்துள்ளார்.

சுமார் 20 சதவீத ஊழியர்கள் பணிக்கு அமர்த்துவதன் மூலம் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.