இலங்கையில் கைவிடப்பட்ட காற்றாலை திட்டங்களுக்காக அதானி கிரீன் எனர்ஜி (adani green energy) நிறுவனம் மேற்கொண்ட ஆரம்ப செலவுகளை மீள செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான, 350 மெகாவோட் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டங்களில் இருந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அண்மையில் விலகியிருந்தது.
புதிய அரசாங்கம் மின்சார கட்டணத்தை மாற்ற முனைந்ததைத் தொடர்ந்து, குறித்த நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.
இந்தநிலையில், கடந்த மே மாதத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பிய அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், நிலையான எரிசக்தி அதிகார சபையுடன் இணைந்து மேற்கொண்ட 3 மில்லியன் அமெரிக்க டொலர் உள்ளிட்ட ஆரம்ப செலவுகள மீள செலுத்துமாறு கோரியுள்ளனர். எவ்வாறாயினும், அந்த நிறுவனம் தங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த தொகையை இறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, இது குறித்து சட்ட ஆலோசனை பெற உள்ளதாக அரச உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏதேனும் தொகை செலுத்த வேண்டுமாயின், அது அமைச்சரவை ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படும் என. அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.