இலங்கையில் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள்: மீனாட்சி கங்குலி

இலங்கையில் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளமை ஐநா உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவின் பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் “இலங்கை அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாடுகளுக்கு காட்ட முயற்சிக்கப்படுகின்றது.

இலங்கையில் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளமை ஐநா உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை மேற்கோள்காட்டி, 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வறுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி தற்போது மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில், மனித உரிமைகள் நிலைமையை ஆராய்வதில் பல்வேறு முறைகள் மூலம் ஏற்பட்டுள்ள தடைகளை ஆராய சர்வதேச சமூகத்தின் தலையீட்டிற்கான தற்போதைய பிரேரணை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று சபையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், தற்போதுள்ள தீர்மானத்தை புதுப்பிப்பதற்கு மேலதிகமாக, இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்தகால துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்க விமர்சகர்களுக்கு எதிராக அதிகாரிகள் புதிய அடக்குமுறைச் சட்டங்களைத் தேடி மிரட்டல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் 1983-2006 உள்நாட்டுப் போரின் போது நடந்த கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க மறுக்கிறது.

“நாட்டின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் மூல காரணங்களில் ஒன்றான ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்வாகத் தோல்விகள் ஆகியவற்றிலும் இந்த வேரூன்றிய தண்டனையின்மை வெளிப்படுகிறது” என்று ஐநா அறிக்கை கூறுகிறது.

“பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தவறாக நடத்தப்படுவது தொடர்கிறது” என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஜனவரி 2023 மற்றும் மார்ச் 2024 இற்கு இடையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 21 சட்டத்திற்கு புறம்பான கொலைகள், 26 தடுப்பு காவலில் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் 1,342 தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களை பதிவு செய்தது.

“கடத்தல், தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை, தவறாக நடத்துதல் மற்றும் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் தமிழ் இனத்தைச் சேர்ந்த தனிநபர்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறை” போன்ற சமீபத்திய குற்றச்சாட்டுகளை ஐநா ஆய்வு செய்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் பல முறை பயங்கரவாத சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது.

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஐ.நா அல்லது வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தொடர்பு கொண்டதற்காக பழிவாங்கலை எதிர்கொள்கின்றனர்.

போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் 121,957 பேரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானவர்களை இராணுவத்தால் நடத்தப்படும் “புனர்வாழ்வு” மையங்களுக்கு அனுப்பியுள்ளனர்” என்றும் மீனாட்சி கங்குலி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.