இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலில் “உறுதியான மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கு” பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில் சர்வதேச தரநிலைகளின்படி மனிதபுதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை மீதான ஊடாடும் கலந்துரையாடலின் போது பிரித்தானியா இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிக்கையை பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் (Eleanor Sanders) முன்வைத்தார். இலங்கையின், “உறுதியான மற்றும் நிலையான முன்னேற்றத்தின்” அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் தன்னிச்சையான தடுப்புக்காவல், காவலில் வைக்கப்பட்ட மரணங்கள், மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்துதல் மற்றும் சிறுபான்மை சமூகங்களை குறிவைத்தல் உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகள் குறித்து அவர் கவலைகளை எழுப்பினார்.
இலங்கை அரசாங்கம் சில சட்டத்தை ரத்து செய்ய பொது உறுதிமொழிகளை அளித்த போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து எலினோர் சாண்டர்ஸ் கவலை தெரிவித்தார்.
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை ஒழிக்க பொது உறுதிமொழிகள் இருந்த போதிலும், அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த தொடர்ந்து அது பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இழப்பீடுகள் மற்றும் காணாமல் போனவர்களை மையமாகக் கொண்ட உள்நாட்டு நிறுவனங்களின் பணிகளை மீண்டும் ஊக்குவிக்குமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைகள் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பங்கேற்பு மற்றும் நம்பிக்கையை, உள்ளடக்கியதாகவும், விரிவானதாகவும், சர்வதேச தரங்களுடன் ஒத்துப்போகும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.