இலங்கையின் அழியா இராஜதந்திர ‘கறை’ : விதுரன்

இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியல் வரை படத்தில் இலங்கையொரு சிறிய தீவாக இருந்தாலும், தீவு தேசங்கள் வல்லரசுகளின் அதிகாரப் போட்டியால் சிதைக்கப்படுவதற்கு ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா’ கப்பல் விவ காரம் வரலாற்றுச் சான்றாக மாறியிருக்கிறது.
‘நடுநிலைமை’ என்ற போர்வையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வெளியுறவுக் கொள் கையானது வெறும் கண்துடைப்பு என்பது அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச அரங் கில் ‘இலங்கையின் நடுநிலைமை’ கடுமையான விமர் சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.  அதுமட்டுமன்றி, ஏகாதிபத்திய வாதம் பேசிய வர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற நிலையில் அவர் களின் இராஜதந்திர முதிர்ச்சியற்ற தன்மையையும், அழுத் தங்களுக்குப் பணியும் பலவீனத்தையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
இந்த விவகாரத்தின் ஆணிவேராக இருப்பது ஈரா னியக் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புதான். இந்தியா வின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலான் – 2026’ சர்வதேச கடற்படைப் பயிற்சியின் போது, இலங்கையின் 26ஆவது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட ஈரானியக் கப்பல்களை இலங்கைக்கு வருமாறு ‘நட்புறவு விஜயம்’ என்ற அடிப்படையில் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி கடற்படைத் தளபதியுடனான உரையா டலில் விசாகப்பட்டனத்தில் வைத்து ஈரானின் கப்பற் படைத் தளபதியை பக்க நிகழ்வில் சந்தித்ததையும் உறுதிப் படுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த உண்மையை இலங்கை அர சாங்கம்  ‘அரசாங்கமாக’ மறைக்க முற்பட்டமையானது பாரிய இராஜதந்திரத் தவறாகும். முதலில் ஈரானியக் கப்பல்களுக்கு ‘அழைப்பு விடுக்கப்படவில்லை’ என்று பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் ஈரானிய கப்பல் தாக்கப்பட்ட அன்றைய தினமே தெரிவித்தனர்.
அதன்பின்னர் ‘பொய்கள் என்றால் சபையில் கூறுவேன். உண்மைகளை பொதுவெளியில் கூறுவேன்’ என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது பெப்ரவரி 26 ஆம் திகதி ஈரானிய கப்பல்களுக்கு அனுமதி கோரப்பட்ட அதேவேளையில், அமெரிக்காவும் தனது ஏவுகணைகள் பொருத்தப்பட்ட போர் விமானங்களை மத்தளத்தில் தரை யிறக்க அனுமதி கோரியதாக தெரிவித்தார்.
அத்துடன் தலா எட்டு எவுகணைகள் பொருத் தப்பட்ட இரு அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுத்த தன் மூலம் தனது அரசாங்கம் ‘நடுநிலை’ வெளிவிவகாரக் கொள்கையின் பிராகாரம் செயற்பாட்டை முன்னெடுத்ததாக மார்பு தட்டிக்கொண்டிருந்தார். ஆனால் கொழும்பில் ஊடகவியலாளர் சந் திப்பை நடத்திய இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் ‘இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில்  நடைபெற்ற ‘மிலான் 2026’ நிகழ்வில் பங்கேற்ற ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகைதரும்படி அந் நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டது என்பதை மிகத்தெளிவாகக் கூறினார்.
அத்துடன் குறித்த அழைப்புக்கு அமைவாகவே அக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பை நோக்கி வருகை தந்தன. அக்கப்பலில் இருந்தவர்கள் தாக்குதலை எதிர்கொள்வதற் குத் தயாராக ஆயுதங்களுடன் இருக்கவில்லை. அது மாத்திரமன்றி அமெரிக்காவின் அத்தாக்குதலில் மர ணித்தவர்களில் பலர் படைவீரர்கள் அல்ல. மாறாக அவர்கள் சக்ஸபோன் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைப் பவர்களாவர்’ என்பதையும் வெளிப்படுத்தினார்.
ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷின் பகிரங்கமான மேற்படி கூற்றுக்களை தற்போது இலங் கையால் இலகுவாக தட்டிக்கழித்துவிட முடியவில்லை. இதனால் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ‘இலங்கைக்கு வருகைத் தருமாறு ஈரானிய கப்பலுக்கு இராஜதந்திர மட்டத்தில் எவ்விதமான உத்தியோகபூர்வ அழைப்பும் விடுக்கவில்லை. மரபு ரீதியான நட்பு அழைப்பே விடுக்கப்பட்டது. இலங்கைக்கான ஈரானிய தூதுவர் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு தயாரில்லை’ என்று கூறி கையை விரித்துவிட்டார்.
அழைப்புக்களின் வடிவங்கள் எவ்வாறாக இருந் தாலும் இலங்கை கடற்படைத் தளபதியால் ஈரானிய கப்பல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது. அதனடிப்படையில் தான் ஈரானின் மூன்று கப்பல்களும் பெப்ரவரி 26ஆம் திகதி இலங்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளன.
அன்றையதினமே காலையிலேயே மூன்று  ஈரானிய கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் மார்ச் 09-13 வரையில் நிறுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டும் உள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் மணிக்கு 70 – 80 நாட்டிக்கல் மைல் வேகத்தில் பயணித்தால் கூட மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைய முடியும்.  ஆனால் ஈரான் கப்பல்கள் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு தங்கியிருப்பதற்கு திட்டமிட்டுள்ளன என்பது அவர்களின் கொழும்பில் நங்கூரமிடுவதற்காக கோரிய திகதிகள் வெளிப்படுத்தியுள்ளன.
அதேநேரம் பெப்ரவரி 26ஆம் திகதி பிரவேச அனுமதி கோரப்பட்ட நிலையில் மார்ச் நான்காம் திகதி (அமெரிக்க நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தப்பட்ட நாள்) வரையில் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை நாட்டின் கடற்படைத்தளபதியால் நட்பு பயணத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்ட கப்பல்களை அனுமதிப்பதற்கு சுமார் ஒருவாரம் தாமதிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் ஆழமாக நோக்கப்பட வேண்டியுள்ளது.
அடுத்ததாக, 9ஆம் திகதி கொழும்பில் நங் கூரமிடுவதற்கு அனுமதி கோரியிருந்த கப்பல்கள் நெருக் கடியான நிலைமைகளை உணர்ந்த நிலையில் தான் பொருளாதார மண்டலத்திற்குள் நின்றவாறு கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அவசரமான அனுமதி கோரப்பட்டு 11 மணிநேரம் இழுத்தடிக்கப்பட்டும் உள்ளது.
‘நட்புறவு விஜயத்திற்கு’ அழைக்கப்பட்ட கப்பல், தனது பிரத்தியேக பொருளாதார மண்டலத்துக்குள் இருக்கும்போது அதற்குப் பாதுகாப்பு வழங்கத் தவறியது அல்லது அனுமதி வழங்கத் தாமதித்தது இலங்கை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.
சர்வதேச கடல் சட்ட உடன்படிக்கையின்படி, ஒரு நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் மற் றொரு நாட்டின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்துவது அந்த கடலோர நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.  ஈரானியக் கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா’ காலிக் கடற்பரப்பிற்கு அப்பால் 44 கடல் மைல் தொலைவில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இது இலங்கை யின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்த ஒரு அத்துமீறலாகும்.
அதுமாத்திரமின்றி எதிர்காலத்தில் இலங்கை கடற்படை தளபதி(யாராக இருந்தாலும்) சர்வதேச தளங் களில் விடுக்கும் அழைப்புக்களை ஏற்று கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமா என்பதிலும் ஐயப்பாடுகள் எழுந்துள்ளதோடு கடற்படைத் தளபதிகளின் அழைப்புக்கள் சர்வதேச மட்டத்தில் கேலிக்குள்ளாகும் நிலைமையே உருவாகியுள்ளது.
இதேவேளை, மார்ச் 4ஆம் திகதிக்கும் 8 ஆம் திகதிக் கும் இடையில் அமெரிக்கா தனது இரு போர் விமானங்களை மத்தளவில் இறக்க முயன்றுள்ளது. அதே மார்ச் 4ஆம் திகதியன்று தான் ஈரானியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுவொரு தற்செயலான நிகழ்வு அல்ல ஜிபுட்டியில் இருந்து இயங்கும் அமெரிக்கப் போர் விமானங்கள், வழக்கமாகப் பயன்படுத்தும் இந்தியத் தளங்களைத் தவிர்த்து மத்தள விமான நிலையத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்வி இங்கு மிக முக்கிய மானது அல்ல.
ஈரானியக் கப்பல்கள் இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருப்பதை அறிந்தே, அவற்றை தாக்குவதை மையமாகக் கொண்டதொரு தந்திரோபாயத் திட்டத்துக் காகவே மத்தளவைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
இலங்கையுடன் போர் விமானங்கள் தரையிறங்கு வதற்கான எந்தவொரு முறையான பாதுகாப்பு உடன்பாடும் இல்லாத நிலையில், அமெரிக்காவுக்கு தலா எட்டு ஏவுகணைகளுடன் போர் விமானங்களை மத்தளவில் தரை யிறக்குவதற்கான தேவை எதற்காக எழுந்தது?
இலங்கை அரசாங்கம் இந்த உண்மைகளைத் தனது மக்களுக்குத் தெளிவாக விளக்கத் தவறிவிட்டது. இதனால் அமெரிக்காவைத் திருப்திப்படுத்த ஈரானியக் கப்பலை இலங்கை காவுகொடுத்ததா என்ற கேள்வியே தற் போது எங்கும் ஒலிக்கிறது. அதேநேரம், ஈரானின் பிறிதொரு கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெருக்கு இலங்கை புகலிடம் கொடுத் திருக்கின்றது. அதற்கான தீர்மானம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கு இந்தியாவின் வழிகாட்டலே காரணமாகியுள்ளது.
ஈரானின் மூன்றாவது கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் நெருக்கடியான சூழலில் கொச்சி துறைமுகத்தினை நோக்கிச் சென்றிருந்த நிலையில் அதற்கு புகலிடம் அளிப்பதற்கு இந்தியா தீர்மானித்திருந்தது. அந்த தீர்மானத்தின் முன்மாதிரியும், இந்தியாவின் உறுதுணையும் தான் இலங்கை  ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் விடயத்தில் சாதக தீர்மானத்துக்கு வித்திட்டது.
மூன்று கப்பல்கள் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய விமர்சனங் கள் பல காணப்பட்டாலும்  தார்மீக அடிப்படையில் ஐ.ஆர்.ஐ.எஸ் லவனை பாதுகாத்திருந்த இந்தியா அதி லிருந்த 133 மாலுமிகளையும் பத்திரமாக ஈரானுக்கு திருப்பி அனுப்பி விட்டது.  ஆனால் ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெரில் மீட்டுள்ள 208பேர், ஐ.ஆர்.ஐ.எஸ் டெனாவில் மீட்கப்பட்ட 32பேர் உள்ளடங்கலாக 240பேரையும் பாதுகாப்பாகத் தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதும் மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் இலங்கையின் கடமையாகும்.
ஆனால் அந்தச் செயற்பாட்டை இலங்கையால் முன்னெடுக்க முடியாத திராணியற்ற நிலையில் தான் உள்ளது. இது இலங்கை அரசு சர்வதேச அழுத்தங்களுக்கு எவ்வாறு அடிபணிகிறது என்பதை சர்வதேசத்துக்கு  வெளிப் படுத்தியவாறுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தன்னை ‘நடுநிலை நாடு’ என்று பிரசாரம் செய்வதில் காட்டும் ஆர்வத்தைச் செயற்பாடுகளில் காட்டத் தவறிவிட்டது, தவறிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் அமெரிக்காவின் பாதுகாப்பு அழுத்தங்கள், மறுபுறம் ஈரானின் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் நட்புறவு – இரண்டையும் சமநிலைப்படுத்தத் தெரியாத முதிர்ச்சியற்ற போக்கையே அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் வல்லரசு நாடுகளின் மோதல் களமாக இலங்கைத் தீவு மாறி வருவதையும், அதனைத் தடுக்கும் வலிமை தற்போதைய அரசியல் தலைமைக்கு இல்லை என்பதையும் ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா’ கப்பல் விவகாரம் பட்டவர்த்தனமாக நிரூபித்துள்ளது.
‘ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா’ மூழ்கடிக்கப்பட்டாலும் இப்போதைக்கு இந்த விவகாரம் முடிவுக்கு வரப்போவதில்லை. ஏனென்றால் ஈரானின் கடற்படை அங்கத்தவர்கள் இலங்கையில் தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் அழியாதவொரு கறையாகவே நிலைத் திருக்கும்.