அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்தை (Matthew Duckworth) நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் சிரேஷ்ட தொழில் அதிகாரி என்றும், முன்னர் அமெரிக்க வர்த்தக பணிக்குழுவின் உதவிச் செயலாளராகவும், அவுஸ்திரேலியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான துணைத் தலைமை பேச்சுவார்த்தையாளராக பணியாற்றியவர் என்றும் அறிக்கை ஒன்றில் அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2022 முதல் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய போல் ஸ்டீபன்ஸ் (Paul stephens) என்பவருக்குப் பதிலாக டக்வொர்த் நியமிக்கப்படுகின்றார். “இலங்கை, வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் அவுஸ்திரேலியாவின் முக்கிய பங்காளி என்று அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
‘எங்கள் உறவு வலுவான சமூக இணைப்புகள், நீண்டகால வளர்ச்சி கூட்டாண்மை, வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள், அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது’.
‘நாடு கடந்த குற்றம், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு மற்றும் மக்கள் கடத்தல் உள்ளிட்ட பகிரப்பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களுக்கு நடைமுறை தீர்வுகளைக் கண்டறிய அவுஸ்திரேலியாவும் இலங்கையும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன’ என்றும் அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.