இறக்குமதி செய்யப்படும் உப்புக்கு 40 ரூபா வரி

இறக்குமதி செய்யப்படும் உப்பு தொன் ஒன்றுக்கு இறக்குமதி வரியாக 40,000 ரூபாய் விதிக்கப்படுவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உப்புக்கு 40 ரூபாய் வரி விதிக்கப்படுவதோடு இறக்குமதி செய்யப்படும் 100 கிராம் உப்புக்கு 4 ரூபாய் வரி விதிக்கப்படும்.
சந்தையில் 400 கிராம் உப்பு பைக்கட் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்காக 16 ரூபாய் வரி உள்ளடக்கப்படுகிறது.

இதேவேளை, 400 கிராம் உப்புத் தூள் பைக்கட் ஒன்று 100 – 120 ரூபாய் வரையிலும் உப்பு பைக்கட் ஒன்று 120 – 180 ரூபாய் வரையிலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இவ்வாறு உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதன்படி, இந்தியாவில் இருந்து 12,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் ‘இவ்வாறு உப்பை இறக்குமதி செய்வது தற்காலிகமான ஒரு தீர்வு’ என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
அதேநேரம் ‘மொத்த விலைக்கு தங்களுக்கு உப்பு கிடைப்பதில்லை’ என்று சிறு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.