இலங்கை – இந்திய மீனவா் பிரச்சினை மீண்டும் சூடுபிடித்துள்ளது. நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவா்களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் இந்திய மீனவா் ஒருவா் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றாா். சில நாட்களுக்கு முன்னரும் இதேபோன்ற சம்பவம் ஒன்றில் இலங்கைக் கடற்படைச் சிப்பாய் ஒருவா் பலியானாா்.
இந்தச் சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவா் பிரச்சினை தொடா்ந்தும் கொதி நிலையில் இருப்பதை உணா்த்துகிறது. அவசரமாகத் தீா்க்கப்பட வேண்டிய இந்தப் பிரச்சினை அறிக்கைகள், கண்டனங்களுடன் மட்டுமே நின்றுவிடுகின்றது. நிரந்தரமான ஒரு தீா்வைக்காண்பதற்கு இரு நாட்டு அரசியல் தலைவா்களும் துணிவதாகத் தெரியவில்லை. பிரச்சினை தொடா்வதை தமக்கான வாய்ப்பாக அவா்கள் கணக்குப் போட்டு வைத்துள்ளாா்கள். இந்த நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு வடபகுதியில் தனது ஆதரவை வளா்ப்பதற்கான உபாயத்தை சீனா வகுத்துச் செயற்படத் தொடங்கியுள்ளது. இந்த மீனவா் பிரச்சினை இன்று நேற்று உருவான ஒன்றல்ல. இது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு பிரச்சினை. கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்தமையால்தான் இந்தப் பிரச்சினை மோசமடைந்ததாக இந்தியத் தரப்புக்களும், இந்தியா மீனவா்களும் சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியததல்ல. அது அரசியல் நோக்கத்துடன் முன்வைக்கப்படுகின்ற ஒரு கருத்து.
கச்சதீவை இலங்கை பெற்றுக்கொண்ட அதேவேளையில், வெட்ஜ் பாங் Wadge Bank என்ற வளங்கள் நிறைந்த தீவுப் பகுதியை இலங்கையிடமிருந்து இந்தியா பெற்றுக்கொண்டது என்பதை இந்திய அரசியல் தலைவா்கள் வசதியாக மறந்துவிடுகின்றாா்கள். இலங்கை மீனவா்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பதும், இந்திய மீனவா்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பதும் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் ஒரு நிகழ்வுதான். கடலில் எல்லைகளைப் போடமுடியாது என்பது இதற்குக் காரணம். மீன்களுக்கும் எல்லை போடமுடியாது. மீன்களைத் தேடிவரும் மீனவா்களுக்கும் எல்லைபோட முடியாதுதான். ஆனால், இப்போது கடலில் எல்லைக்களைக் காட்டக்கூடிய நவீன கருவிகள் வந்துவிட்டது. அதனால், எல்லைகளைத் தாண்டிச் செல்வதை மீனவா்களால் தெரிந்துகொளள்ள முடியும். இந்திய மீனவா்கள் எல்லை தாண்டிவந்து மீன்பிடிக்கின்றாா்கள் என்பது மட்டும்தான் பிரச்சினையல்ல. எல்லைதாண்டி வரும் மீனவா்கள் பயன்படுத்தும் உபகரணங்கள்தான் பிரச்சினை. அவா்கள் பொட்டம் ரோலா் எனப்படும் மடி வலை மீன்பிடி முறையைப் பயன்படுத்துகின்றாா்கள்.
அதனைவிட பலம்வாய்ந்த பாரிய படகுகளில் பெரும் கூட்டமாாக வருகின்றாா்கள். நெடுந்தீவு, மன்னாா் போன்ற பகுதிகளில் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு அவா்களின் ஆக்கிரமிப்பைக் காணமுடியும். அவா்கள் வரும் தினங்களில் உள்ளுா் மீனவா்கள் கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிா்க்கின்றாா்கள். பாரிய பலத்துடன் வரும் இந்திய மீனவா்களை தம்மால் எதிா்கொள்ள முடியாது என்பதுதான் இதற்குக் காரணம். வடபகுதி மீனவா்களைப் பொறுத்தவரையில் நீண்டகாலப் போரினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்டவா்களில் அவா்கள் முதன்மையானவா்கள். பல வருட காலமாக மீன்பிடிப்பதே தடை செய்யப்பட்ட நிலை இருந்தது. அதனைவிட போரினால், தமது மீன்பிடி உபகரணங்களையும் அவா்கள் இழந்திருந்தாா்கள். தமது தொழிலை முன்னேற்றுவதற்கு அரசின் உதவிகள் கூட அவா்களுக்குப் பெரிதாகக் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் இப்போது அவா்கள் இந்திய மீனவா்களின் ஆக்கிரமிப்பை எதிா்கொள்கின்றாா்கள். குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 500 இந்தியப் படகுகளுக்கு மேல் வட கடலுக்கு வருகின்றன.
இந்திய மீனவர்களினால் ஆயிரம் கிலோ கிராக்கும் கூடுதலாக மீன் பிடிக்கப்படுகின்றது. இதனால், வடக்கு மீனவர்கள் 350 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பதாக கடற்றொழில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தாவே அண்மையில் தெரிவித்திருந்தாா். வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு சமமாக 900க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் வடக்கு கடற் பரப்பில் பிரவேசிப்பதாக தெரிவிக்கப்பட்டது. வடபகுதி மீனவா்களின் கடல்வளம் இவ்வாறு பாரியளவில் சூறையாடப்படுகின்றது. நெடுந்தீவில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து இராமேஸ்வரம் மீனவா்கள் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றாா்கள். அங்கு உயிரழிழந்த தமது சகாவின் உடல் இராமேஸ்வரத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவா்கள் முன்வைத்துள்ளாா்கள். இந்திய – இலங்கை இராஜதந்திர மட்டத்தில் பேசப்பட்டு உடலை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சனிக்கிழமை ஊடல் இராமேஸ்வரத்துக்கு அனுபபப்பட்டது. கைதானவா்களும் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
அதேவேளையில், தமிழக மீனவா் உயிரிழந்தமைக்கு இந்திய அரசும் இராஜதந்திர மட்டத்தில் தமது கண்டனத்தை இலங்கைக்குத் தெரிவித்திருந்தது. அதேபோல கடந்த மாதம் இலங்கைக் கடற்படைச் சிப்பாய் ஒருவா் உயிரிழந்த போதும், இலங்கை அரசாங்கம் உத்தியோகபுா்வமாக தமது கண்டனத்தை இந்தியாவுக்குத் தெரிவித்திருந்தது. இந்தக் கண்டனங்கள் உள்நாட்டு அரசியலில் எழக்கூடிய அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான உத்திகளே தவிர, இராஜதந்திர ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியவையல்ல. உண்மையில் இந்தப் பிரச்சினை தொடா்வதால் பாதிக்கப்படுவது வடபகுதி மீனவா்களும், தமிழக மீனவா்களும்தான். வடக்கு மீனவா்களின் பாதிப்புக்கள் குறித்து முன்னரே தெரிவிக்கப்பட்டது. தமிழக மீனவா்களைப் பொறுத்தவரையில், அங்கு பாரிய ரோலா்களை வைத்திருப்பவா்கள் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளாகவும், முதலாளிகளாகவுமே இருக்கின்றாா்கள். அவா்களுடைய கட்டளையின்படிதான் அந்தப் படகுகள் இலங்கைக் கரைக்குள் பிரவேசிக்கின்றன. இலங்கைக் கரைகளில் அவா்களால் பிடிக்கப்படும் மீன், இறால் என்பன கொழுத்த விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமது வருமானத்துக்காக அவா்கள் அப்பாவி மீனவா்களைப் பலியாக்குகின்றாா்கள்.
அதேவேளையில், இராமேஸ்வரம் பகுதியில் தமிழக மீனவா்கள் போராட்டங்களை நடத்துவதைப் போல இலங்கையில் வடபகுதி மீனவா்களும் அடிக்கடி போராட்டங்களை நடத்துவதை காணமுடிகின்றது. இந்திய மீனவா்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மன்னாரிலும், யாழ்ப்பாணத்தில் இந்திய துணை உயா் ஸ்தானிகராலயத்தை முற்றுகையிட்டும் அவா்கள் அடிக்கடி போராடுவதைக் காணமுடிகின்றது. இரண்டு நாட்டு அரசியல்வாதிகளாலும் இரு நாட்டு மீனவா்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஈழத் தமிழா்களை தமது தொப்புள் கொடி உறவுகள் எனக்கொண்டாடும் தமிழக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தமிழக மீனவா்களின் ஆக்கிரமிப்பதால் ஈழத் தமிழா்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகின்றாா்கள் என்பதை அறியாததது போல நடிக்கின்றாா்கள்.
தமிழகத்தில் உள்ள வாக்குகள்தான் அவா்களுக்கு முக்கியம். இது போன்ற நிலைமைகளால்தான் இந்தப் பிரச்சினை பல வருடகாலமாக தீா்க்கப்படாத ஒன்றாக இருந்தது வருகின்றது. தமிழக மீனவா்களின் ஆக்கிரமிப்பால், பல நாட்களாக தொழிலுக்கே செல்ல முடியாத நிலையில் மன்னாா், நெடுந்தீவு மீனவா்கள் உள்ளாா்கள். தமிழகத் தலைவா்கள் மீதான நம்பிக்கை காணாமல் போவதற்கும், இந்திய எதிா்ப்புணா்வு வளா்வதற்கும் இவை காரணமாகின்றது. கலங்கிப்போயுள்ள இந்தக் குட்டையில் இப்போது மீன்பிடிக்க சீன முற்படுகின்றது. வடபகுதியில் கால் பதிக்கவும், மக்களின் மனங்களில் இடம்பிடிக்கவும் இதனைப் பயன்படுத்துவதுதான் சீனாவின் திட்டம்.
வடக்கு மீனவா்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றாா்கள். அவா்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பவா்களாக யாரும் இல்லை என்பதும் சீனப் புலனாய்வாளா்களின் கண்டுபிடிப்பு. சீன அரிசி, உலா் உணவுப் பொதிகள், சீனாவிலிருந்து மீன்பிடி வலைகள், கடற்றொழிலுக்கான உபகரணங்கள் என்பவற்றுடன் சீனத் துாதுவரும், துாதரக அதிகாரிகளும் இப்போது அடிக்கடி வடபபகுதிக்கு விஜயம் செய்கின்றாா்கள். வடக்கில் சீனா கால்பதிப்பதற்கு ஏதோ ஒருவகையில் இந்தியாவின் செயற்பாடுகள்தான் காரணமாகின்றது. மீனவா் பிரச்சினை தொடரும் நிலையில், அதனைத் தமக்கு எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பதைத்தான் சீனாவின் புலனாய்வாளா்களும், கொள்கை வகுப்பாளா்களும் ஆராய்வாா்கள் என்பதை புதுடில்லி புரிந்துகொள்ளாமலா இருக்கின்றது?