யாழ் விமானநிலையயத்தில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து பெயர்ப்பலகை, அறிவிப்புப் பலகைகள் எழுதப்பட்டிருப்பது தொடர்பில் இனவாத கூச்சல்கள் பலமாக எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துறைசார் அமைச்சர் என்றவகையில் இது தொடர்பில் மனோ கணேசன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அக்கருத்து பின்வருமாறு,
இலங்கையின் இன்றைய (புதிய அல்ல..!) அரசியலமைப்பின்படி ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும் ஆகும். இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும்.சட்டப்படி சமமான ஆட்சி – தேசிய மொழிகள் என்பதற்காக, பெயர்பலகைகளில், ஒன்றின் மீது ஒன்றை எழுத முடியாது.
ஆகவே வரிசையாக எழுத வேண்டும். வடக்கு, கிழக்கு தவிர்ந்த, ஏனைய மாகாணங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்றும் எழுத வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு பிரதேச செயலக பிரிவில் அந்த மாகாணத்தில் பெரும்பான்மையோர் பேசுகின்ற மொழியை தவிர்ந்த அடுத்த மொழி பேசுபவர்கள் அதிகமாக வாழ்ந்தால், இந்த வரிசை மாறலாம்.
ஆனால் ஆங்கிலம் எப்போதும் மூன்றாம் இடத்திலேயே எழுதப்பட வேண்டும்.
<இலங்கை அரசியலமைப்பு- அத்தியாயம் 4 – மொழி>
நிர்வாக மொழிகள்:
22. (1) இலங்கை முழுவதிலும் சிங்களமும், தமிழும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்த்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம், இலங்கையின் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், அரச பொது பதிவேடுகளை பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடத்தப்படுவதற்காகவும், சிங்கள மொழி பயன்படுத்தப்பட வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும்.
https://www.parliament.lk/files/pdf/constitution-ta.pdf



