இன நெருக்கடி தீா்வுக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச தயார் – கிளிநொச்சியில் அநுரகுமார

anura k இன நெருக்கடி தீா்வுக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச தயார் - கிளிநொச்சியில் அநுரகுமாரதேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க நேற்று பகிரங்கமாக தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த மாநாடு நேற்றுக் காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு –

“எமது வரலாற்றை எடுத்துக்கொண்டால், நாங்கள் திருமணம், சமய வழிபாடுகள், கலாசாரம் உள்ளிட்டவற்றில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயற்பட்டோம். நாங்கள் ஒன்றாகவே வாழ்ந்தோம். எமக்குள் இனவாதம், வேறுபாடுகள் இருந்திருக்கவில்லை. கடந்த காலத்தில் பிரிவினை அரசியலே மேற்கொள்ளப்பட்டது. தெற்கிலும், வடக்கிலும் அவ்வாறு பிரிவினை பேச்சுக்களை முன்னெடுத்தே அரசியல் செய்யப்பட்டது. அந்த அரசியல் நிலையிலிருந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

இந்தியா எனும் நாட்டை நாங்கள் பார்க்கவேண்டும். இந்திய தேசியக் கொடியின் கீழ் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்கின்றார்கள். இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனங்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். அங்கு பல்வேறு வகையான கலை, கலாசாரம் என இருந்தாலும் அவர்கள் இந்தியர்களாக ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். அந்த ஒற்றுமையினால் அப்துல் கலாம் எனும் ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவர முடிந்தது.

அந்த ஒற்றுமையால் சிறுபான்மை இனமான சீக்கிய இனத்தவர் ஒருவரை பிரதமராகவும் கொண்டுவர முடிந்தது. அந்த ஒற்றுமையானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால், எமது நாட்டில் அதற்கு
மாறாக நடந்தது. சுதந்திரம் கிடைக்கப்பெற்ற பின்னர் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. மொழிப் பிரச்னை உருவாகியதை தொடர்ந்து இனப்பிரச்னையும் தொடங்கியது.

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மாநாட்டில் தனிநாடு கோரி சூரியனில் தேர்தலில் போட்டியிட்டனர். தற்கொலை குண்டுதாரிகள் உருவாக்கப்பட்டனர். தொடர்ந்து 2009 இல் யுத்தம் முடிந்தது. நாங்கள் சுதந்திரத்துக்கு பின்னர் சண்டையிட்டே காலம் கடந்தது. அதனால் நாங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை. இழப்புக்களையும், பகைகளையும், இன ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் வாழ நேர்ந்தது. இவற்றுக்கு முடிவு வேண்டும் என்பதற்காகவே இந்த அரசியல் சூழல் எழுந்துள்ளது. அனைவரும் ஒன்றாகி அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கவேண்டும்.

நடு நிலையான அரசியல்வாதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். அடுத்து வரும் நாட்களில் யாழ்ப்பாணத்திலும் தமிழ் அரசியல்வாதிகளுடன் பேசஉள்ளோம். எமது அரசாங்கள் உருவாக்கப்பட்ட சில நாட்களிலேயே பல்வேறு தீர்வுகளை நாங்கள் வழங்கு வோம்” என்றும் அநுர குமார தெரிவித்தாா்.