இன்று நடைபெற்ற பல உள்ளூராட்சிமன்றங்களின் கன்னி அமர்வு…

பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதில் சிக்கல் இல்லாத 161 உள்ளூராட்சிமன்றங்களில் பெரும்பாலானவற்றின் கன்னி அமர்வு இன்று (02) சுபவேளையில் இடம்பெற்றது.  இதன்போது மேயர், பிரதி மேயர், சபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் உள்ளிட்டோர் சத்தியபிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தனிக்கட்சியொன்று பெரும்பான்மையை பெறாத 178 உள்ளுராட்சிமன்றங்களின் பிரதானிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை உள்ளூராட்சிமன்ற ஆணையாளரின் தலையீட்டுடன் இடம்பெறவுள்ளது.
இரகசிய வாக்கெடுப்பு அல்லது பகிரங்க வாக்கெடுப்பு ஊடாக இந்த தெரிவுகள் இடம்பெறும்.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு கடந்த மாதம் 6ஆம் திகதியன்று நடைபெற்றது.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 36 உள்ளூராட்சி மன்றங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி 14 உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 உள்ளூராட்சிமன்றங்களிலும் முன்னிலை பெற்றன.

இந்த முடிவுகளின் பிரகாரம் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 161 உள்ளூராட்சிமன்றங்களில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் இயலுமை காணப்பட்டது. இதற்கமைவாக இந்த 161 உள்ளூராட்சிமன்றங்களுக்குரிய உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரித்தமை குறிப்பிடத்தக்கது.