‘இனவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையையும் வழங்குவதற்கு தயாராக இல்லை.அவர்களுக்கு வாக்களித்து நாம் தொடர்ச்சியாக ஏமாந்திருக்கின்றோம் அல்லது ஏமாற்றப் பட்டிருக்கின்றோம்.நாம் யுத்தத்தினால் பல இழப்புக்களை சந்தித்தபோதும் எமது அரசியலை இன்னும் இழக்காதிருக்கின்றோம்.எமது அரசியல் இருப்பினை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்’ என்று அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அருட்தந்தை மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் முப்பதாண்டு காலம் பிரதம மந்திரியை தலைவராகக் கொண்ட ஆட்சி நிலவியது.அதன் பின்னர் இப்போது 44 ஆண்டுகளாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி நிலவுகின்றது.இந்த இரண்டு ஆட்சியிலும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நீதியும் கிட்டவில்லை.இனப்படுகொலை, இன அழிப்பு விடயங்களைத் தான் நாம் மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இனவாதத்தை கையில் எடுத்துக் கொண்ட சிலர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.இது ஒரு சாபக்கேடாகும்.
இத்தகையோருக்கு வாக்களிப்பதென்பது நமக்கு நாமே குழி பறித்துக் கொள்கின்ற ஒரு செயற்பாட்டினைப் போன்றதாகும்.1987 ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையைத் தொடர்ந்து மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.எனினும் மாகாணசபைக்குரிய அதிகாரங்களையே முழுமையாக தர மறுக்கின்ற ஒரு நிலைமையே இலங்கையில் காணப்படுகின்றது.பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றன.இதுகாலவரை 13 பிளஸ், 13 மைனர்ஸ் என்று பேசிக்கொண்டே இருக்கின்றார்களே தவிர எந்த அதிகாரத்தையும் கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும்.
மக்கள் கோபத்தின் வெளிப்பாடாக கடந்த 2010 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்ஷேகாவுக்கு வாக்களித்தார்கள்.இதுவும் நமக்கு நாமே மண்ணையள்ளிப் போட்டுக் கொண்டதைப் போன்ற ஒரு செயற்பாடேயாகும்.இதேவேளை 2018 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள்.எனினும் மைத்திரியும் யுத்தம் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கின்றார்.இப்பபடியானவர்களுக்குத்தான் மக்கள் வாக்குகளை வழங்கி இருக்கின்றார்கள்.இனவாத அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்தும் வாக்களித்து நாம் ஏமாந்திருக்கின்றோம் அல்லது ஏமாற்றப் பட்டிருக்கின்றோம்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது வேறு எந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளோ தமிழ் மக்களுக்கான உரிமைகளை ஒருபோதும் வழங்கப்போவதில்லை.தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றப் போவதில்லை என்பதே உண்மையாகும்.
தான் ஆட்சிக்கு வந்தால் 13 ஐ அமுல்படுத்துவேன் என்று ரணில் சொல்கிறார்.மஹிந்த ராஜபக்ச 13 இல் சில விடயங்களை நாங்கள் வழங்கப்போவதில்லை என்று குறிப்பிடுகின்றார்.அனுரகுமார திசாநாயக்கவும் 13 வது திருத்தம் குறித்து பல இடங்களில் பேசி இருக்கின்றார்.எனவே அரசியல்வாதிகள் 13 வது திருத்தம் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர்.நான்13 வேண்டாம் என்று ஏற்கனவே எதிர்த்திருக்கின்றேன்.தமிழ் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.இது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.2010 ம் ஆண்டு பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டிருந்தால் அமோக வரவேற்பு கிடைத்திருக்கும் என்பதே உண்மையாகும்.
நாம் யுத்தத்தினால் பல இழப்புகளை சந்தித்தோம்.ஆனால் நாம் எமது அரசியலை இழக்காமல் இருக்கின்றோம்.வடகிழக்கில் இப்போது புல்லுருவிகள் அதிகமாக இருக்கின்றார்கள்.தெற்கின் அரசியலோடு கைகோர்த்து பயணிக்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது.அத்தோடு இந்தியாவுக்கு சாமரம் வீசும் அரசியல்வாதிகளும் இங்கிருக்கின்றார்கள்.அடுத்த பொதுத்தேர்தலுக்கு தம்மை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு முன்னோடி நடவடிக்கையே இதுவாகும்.வடகிழக்கில் இனவாதிகளுக்கு நேரடியாக வாக்களிக்கும் நிலைமையும் இருந்து வருகின்றது.இச்செயலானது வடகிழக்கு எங்கள் தாயகம் என்பதை மறுதலிப்பதாக உள்ளது.வடகிழக்கு மக்களும், அரசியல்வாதிகளும் பேரினவாத கைக்கூலிகளுக்கு பின்னால் நிற்கக்கூடாது.இலவசங்களுக்கும், அற்ப சலுகைகளுக்கும் விலைபோகக் கூடாது.
நாங்கள் யாருக்கு வாக்களித்தும் பயனில்லை என்ற நிலைப்பாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தார்கள்.இந்த நிலைப்பாடு தொடர்பிலும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது .நாம் எமது அரசியல் இருப்பையும் , கனவையும் சாததியப்படுத்திக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.



