இனம சார்ந்த சரியான வேட்பாளரை தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும்!

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தம் இனம சார்ந்த மிகச்சரியான வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என்று மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது.

‘விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி’ என்ற தலைப்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்மக்கள் மற்றும் தமிழ்பேசும் மக்கள் என்.பி.பி. எனும் பெரும்பான்மைப் பூதம் சிறுபான்மை இனங்களை விழுங்கி ஏப்பமிட்டு தனது நயவஞ்சக அரசியலை நாசுக்காக அரங்கேற்ற இடம்கொடுக்க கூடாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘காலம் காலமாக மாறிமாறி வரும் பெரும்பான்மை அரசுகள் நயவஞ்சகமாகவும், மிரட்டியும், ஆசைவார்த்தைகளைக் கூறியும், சிறுபான்மை இனங்களின் வாக்குகளை வசீகரிப்பதற்கு சூழ்ச்சிகள் செய்து வருவது புதிதொன்றும் அல்ல”மாறிமாறி ஏமாற்றப்பட்ட போதிலும் எமது நப்பாசை புதிதாக வரும் ஒருவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்க்க ஏங்கி நிற்கின்றது’. ‘எனினும் 76 வருடகாலமாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு தமது சொந்த தாயகத்திலேயே நடமாடும் பிணங்களாக உரிமையற்று அனாதைகளாக வாழ்ந்து வருகின்றார்கள்’ என்று மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விட அதிக ஆசனங்களைப் பெற்று வரலாற்றில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்த அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் கூட பயங்கரவாத சட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அரசியல் கைதிகளாய் இருப்பவர்களை விடுதலை செய்ய மனமில்லை என்றால் இனவாதமின்றி வேறென்ன இருக்கமுடியும்’.’7 மாதங்களாகியும் தமிழ்மக்கள் எதிர்பார்த்த குறைந்த பட்ச விடயங்களில் கூட எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை’. ‘தமிழர் தரப்பில் இருந்து தேசிய மக்கள் சக்தி சார்பாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழரின் உரிமை தொடர்பாக மௌனம் சாதிப்பது அவர்கட்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும்’ என்று மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் தெரிவித்துள்ளது.