தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பல கட்சிகள் பொது அமைப்புக்கள் தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றது.
இதைத்தொடர்ந்து,வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த தேர்தல் காலங்களில் நாங்கள் அஞ்சியதைப் போலவே தென்னிலங்கையில் அசுர பலத்தோடும் அடக்குமுறைமிக்க அராஜகத்தனமான சிந்தனைகளோடும் அறுதிப்பெரும்பான்மையோடு அமைந்திருக்கின்ற இந்த ஆட்சியாளர்களால் தமிழ்பேசும் மக்கள், குறிப்பாக வடகிழக்கு தமிழ்மக்கள் அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் இத்துன்பம் இன்னும் நீண்டு செல்லும் என்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில்,“அதனொரு ஆரம்பம்தான் எந்தவிதமான வன்முறையும் அற்ற ஜனநாயக ரீதியான மக்களின் ஒன்றுகூடல்கள் தடுத்து நிறுத்தப்படுகின்ற செயற்பாடுகளாக நாங்கள் பார்க்கிறோம்.
இருப்பினும் இந்த மோசமான ஜனநாயக அடக்குமுறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் தட்டிக்கேட்பதற்கும் மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வுகளோடு செயற்பட்டு வருகின்ற சக்திகள் அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது சிறிய ஆறுதலை தந்து நிற்கிறது. இதே ஒற்றுமை உணர்ச்சியோடு இந்த அரசாங்கத்தின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய பேரவாவாகவும் இருக்கிறது.
இச் சிந்தனைகளை அமைதியான வழியில் வெளிப்படுத்தும் முகமாகத்தான் எம்மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகத்தான் நாளைய தினம் கதவடைப்பு போராட்டம் இடம்பெறகிறது என்பதை ஆள்கின்ற அரசாங்கத்திற்கும்இ மற்றும் அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுக்கடமை தமிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.
எமது வரலாற்று கடமையை நிறைவேற்ற விடாமல் செய்வதற்கான நெருக்குவாராங்களை அரச முகவர்களும் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிவருகின்ற தமிழர் நலனுக்கு விரோதமான சில சிங்களஇ தமிழ் அரச கட்சி முகவர்களும் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்திருப்பதாக அறிகிறோம்.
ஆனால் தமிழ்மக்களுடைய உணர்ச்சி மிகு எழுச்சிக்கு முன்னால் அவர்களுடைய அந்த செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல், வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கமும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கமும் பூரண ஆதரவு வழங்கியுள்ளது.
நாளைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு (வடமாகாண கூட்டுறவு ஊழியர் பொதுச்சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக அதன் பொருளாளரும் யாழ்மாவட்ட கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கத் தலைவருமான வே.செல்வகாந்தன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் எதிராக அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் பல்வேறான அடக்குமுறைகளையும் தாண்டி வெற்றியடைந்ததை தொடர்ந்து நாளைய தினம் தமிழ் கட்சிகள் மாத்திரமல்ல தமிழ் இனமே ஒன்றுசேர்ந்திருக்கிறது என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக கருதுகிறோம்.
இந்த போராட்டத்தை வலுவழக்கச் செய்வதற்கும் சிறுமைப்படுத்துவதற்கும் தமிழ் இன விரோதிகள் உட்பட சிங்களப் பேரினவாதத்தின் அரச இயந்திரமும் சேர்ந்து முயற்சிக்கும் என்பதை நாங்கள் அறவோம். இருந்தாலும் தன்மானம் மிக்க தமிழர்களாக நாங்கள் ஒன்றுபட்டோம் என்பதை நாளை இந்த உலகம் பார்க்கும். அதற்காக ஒவ்வொரு கூட்டுறவாளனும் எந்த எல்லைவரை சென்றேனும் வெற்றிபெற செய்வதற்காக எங்கள் ஒவ்வொருவரையும் அர்பணிப்பணித்து களங்காணுவோம். எனவே இந்த நிமிடம் முதல் ஒவ்வொரு கூட்டுறவாளனும் மக்களை விழிப்படையச்செய்கின்ற வரலாற்றுக் கடமையை ஆற்றுமாறு அறைகூவல் விடுகின்றேன் என தெரிவித்துள்ளார்.



