இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அரசாங்கம் கருதினால் ஏன் அது சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்வது குறித்து இவ்வளவு தூரம் அச்சப்படுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்?
இலங்கைக்கான கனடாவின் தூதுவரை அழைத்து எதிர்ப்பு வெளியிட்டமை குறித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் முகநூல் பதிவிற்கான பதில் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என உண்மையில் நீங்கள் கருதினால்,சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கு – அரசாங்கம் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் அச்சமடைகின்றீர்கள்?
நீங்கள் ஏன் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொண்டு அதில் கைச்சாத்திட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க கூடாது?
உண்மை என்னவென்றால் அமைச்சரே,அரசாங்கம் உண்மையைகண்டு அஞ்சி நடுங்குகின்றது.
உண்மையே நல்லிணக்கத்திற்கான ஒரே வழி ஆனால் முன்னைய அரசாங்கங்கள் போன்று உங்கள் அரசாங்கமும் அதனை மறுக்கின்றது.