இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்றும் அதற்கு இலங்கை அரசே காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் நம்பிக்கை இழந்துள்ளோம் என்றும் தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு அதன் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் கூடிய போது இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் உறுப்பினர்களின் வரவேற்பினைப் பெற்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தினை முன்வைத்து கருத்துரைத்த தவிசாளர் தியாகராஜா நிரோஷ், இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் வரலாற்று ரீதியில் நாம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.