தேசிய மக்கள் சக்தியின் தலைவா் அநுரகுமார திசநாயக்க இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது அரசியல் ஆய்வாளா்கள், இராஜதந்திரிகள் மத்தியில் எழுந்த பிரதான கேள்வி, இந்தியாவை இவா் எவ்வாறு கையாளப் போகின்றாா் என்பதுதான். இந்தக் கேள்வி எழுந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. அது ஜே.வி.பி.யின் கடந்த கால வரலாற்றுடன் தொடா்புபட்டது.
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவைக் கையாள்வது என்பது முக்கிய மானது. மறுபுறத்தில் இந்தியாவுக்கும் இலங்கை முக்கியமானது. ஏதோ ஒருவகையில், இலங்கை தன்னுடைய ஆளுகைக்குள் இருக்க வேண்டும் என்பதில் அக்கறைகாட்டும் ஒரு நாடாகவே இந்தியா உள்ளது. “அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்று இந்தியா பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் அதனுடைய வெளியுறவுக் கொள்கையின் உள்ளாா்ந்தமும் அதுதான்!
இந்தப் பின்னணியில்தான் இந்திய வெளி விவகார அமைச்சா் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கா் சில மணிநேர விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு வந்தாா். நண்பகல் கொழும்பு வந்திறங்கிய ஜெய்சங்கா் ஆறு சந்திப்புக்களை அவசரமாக நடத்திவிட்டு இரவே புதுடில்லி திரும்பிவிட்டாா். தமிழ்க் கட்சிகளையும் அவா் சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட போதிலும், அவரது அவசரமான நிகழ்ச்சி நிரலில் தமிழ்க் கட்சிகளைச் சந்திப்பதற்கு நேரம் இருக்கவில்லை. அல்லது – தேவை இருக்கவில்லை என்றும் சொல்லலாம்.
தேசிய மக்கள் சக்தி என்பது ஜே.வி.பி.யின் மற்றொரு வடிவம்தான். ஜே.வி.பி.யில் அரசியல் படித்தவா்தான் அநுரகுமார. இப்போது அவா்கள் அதிகாரத்துக்கு வந்திருப்பதையிட்டு புதுடில்லி பதற்றமடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஜே.வி.பி.யின் ஸ்தாபகா் றோஹண விஜயவீர இலங்கை சீன சாா்பு கம்யுனீஸ்ட் கட்சியிலிருந்துதான் அரசியலுக்கு வந்தவா். ஜே.வி.பி.யின் வளா்ச்சியில் சீனாவின் ஆதரவு இருந்துள் ளமை இரகசியமானதல்ல.
ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தை கொடுக்க முற்பட்ட போது கிளா்ந்தழுந்து, அதனைத் தடுத்து நிறுத்திய ஜே.வி.பி.யும் அதன் ஆதரவுடன் செயற்படும் தொழிற்சங்கங்களும், கொழும்பு முறைமுக நகரத்தையும், அம்பாந் தோட்டை துறைமுகத்தையும் சீனாவுக்கு கொடுத்த போது மௌனமாக இருந்தன. ஆக, ஜே.வி.பி. என்பது சீனாவுக்கு சாா்பான ஒரு அமைப்பாகவே அடையாளம் காணப்பட்டிருந்தது.
இந்தியாவுக்கு சூழவுள்ள நாடுகள் அனைத் தும் சீனாவின் செல்வாக்குக்கு உட்பட்டவையாக மாற்றமடைந்துவரும் நிலையில், இலங்கையும் அவ்வாறு சென்றுவிடுமா என்பது இந்தியாவின் பதற்றத்துக்கு முதலாவது காரணம். இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் தென்முனையத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் இலங்கை அமைந்திருக்கின்றது. ஏற்கனவே, கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் என்பன சீனாவால் குத்தகைக்கு எடுக்கப்பட்டவையாக உள்ள நிலையில், சீன ஆதரவு ஆட்சி ஒன்று இலங்கையில் உருவாகுவது புதுடில்லியைக் குழப்பும் என்பது எதிா்பாா்க்கக்கூடியதுதான்.
ஜே.வி.பி.யின் வரலாற்றைப் படிக்கும் போது இன்னும் இரண்டு விடயங்கள் இந்தியாவுக்கு நெருடலாக இருக்கும். 1971 இல் இலங்கையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முதலாவது கிளா்ச்சியை ஜே.வி.பி. மேற்கொண்டது. இதற்காக இரகசியமாக ஆட்சோ்ப்பை அவா்கள் மேற்கொண்ட போது, கிளா்சியாளா்களை அரசியல் மயப்படுத்துவதற்கான ஐந்து வகுப்புக்களை அவா் கள் நடத்தினாா்கள். அதில் ஒரு பகுப்பு “இந்திய ஆக்கிரமிப்பு” என்ற தலைப்பில் இடம்பெற்றது. ஜே.வி.பி.யின் இந்திய எதிா்ப்பு அதிலிருந்துதான் ஆரம்பமாகின்றது.
1983 ஜூலை தமிழனப் படுகொலைகளைத் தொடா்ந்து ஜே.வி.பி. தடை செய்யப்பட்டது. அதன் பின்னா் இரகசியமாகச் செயற்பட்டுவந்த ஜே.வி.பி.யினா், 1987 இல் இந்தியப் படை இலங்கைக்கு வந்த காலத்தில் தமது இரண்டாது கிளா்ச்சியை நடத்தினாா்கள். திருமலையில், இந்தியப் படையினா் மீது கூட அவா்கள் மறைந்திருந்து தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் உள்ளன. அவா்களுடைய இந்த இரண்டாவது கிளா்ச்சியின் போதும் இந்திய எதிா்பு என்பதுதான் பிரதானமாக முன்னிறுத்தப்பட் டது.
ஆக, ஜே.வி.பி.க்கு இரண்டு அடையாளங் கள் உள்ளன. ஒன்று சீன சாா்ப்பு. இரண்டு இந்திய எதிா்ப்பு! அநுரகுமார திசாநாயக்கவைப் பொறுத்தவரையில் இந்தக் கிளா்ச்சிகளில் அவா் நேரடி யாகச் சம்பந்தப்பட்டவரல்ல. ஆனால், அநுர குமார திசநாயக்கவை பின்னின்று இயக்கும் ரில்வின் சில்வா போன்ற சிலா் ஜே.வி.பி.யின் பழைய வரலாற்றுடன் தொடா்புபட்டவா்கள். அதேவேளை, ஜே.வி.பி.யும், தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் இப்போது செயற்பட்டுவருகின்றது. அதனால், அவா்கள் தமது அடிப்படைக் கொள் கைகளில் இருந்து மாறிவிட்டாா்களா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது.
இந்தியாவின் பதற்றத்துக்கு இவைதான் காரணம். இரண்டு வருடங்களுக்கு முன்னா் இடம்பெற்ற அரகலய என்று சிங்கள மக்களின் கிளா்சியைப் பயன்படுத்தி ஜே.வி.பி. தமது ஆதரவுத் தளத்தை அதிகரித்துக்கொண்டுள்ளது என் பதை புதுடில்லி கடந்த வருடமே அடையாளம் கண்டிருந்தது. இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு சக்தியாக ஜே.வி.பி. வளா்சி யடைந்திருந்த நிலையில்தான் உள்ளுராட்சி மன்றத் தோ்தல்களையும் ரணில் விக்கிரமசிங்க ஒத்தி வைத்தாா்.
கடந்த பெப்ரவரியில் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான ஒரு குழுவினரை இந்தியா அழைத்திருந்தது இந்தப் பின்னணியில் தான். இந்த அழைப்பின் பின்னணியில் இரண்டு – மூன்று நோக்கங்கள் இருந்தன. முதலாவது ஜே.வி.பி. தலைமையுடன் நல்லுறவை ஏற்படுத்துவது. இரண்டாவது இந்தியா தொடா்பான அவா் களுடைய அணுகுமுறை எவ்வாறுள்ளது என்பதை நாடி பிடித்துப் பாா்ப்பது. மூன்றாவது இந்தியாவின் முக்கியத்துவத்தை உணா்த்துவது.
ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் இந்தியாவால் கொடுக்கப்பட்ட இந்த அங்கீகாரத்தை உள்நாட்டில் தமது செல்வாக்கை மேலும் அதிகரிப்பதற்கு அவா்கள் பயன்படுத்திக் கொண்டாா்கள். அதிகாரத்தைப் பெறப்போகும் ஒரு கட்சிக்கு இது தேவையானதாகவும் இருந்தது. சா்வதேச உறவுகளையும் கையாளக்கூடிய ஒரு வா்தான் அநுரகுமார என்ற பிம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த அந்த விஜயம் அவா்களுக்கு உதவியது. ஜனாதிபதியாக அநுர தெரிவாகிய உட னடியாக அவரைச் சந்தித்த கொழும்பிலுள்ள இந்தியத் துாதுவா் வாழ்த்துக்களைத் தெரிவித்தது டன், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு ஒன்றையும் விடுத்தாா். இப்போது இந்திய வெளிவிவகார அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் அநுரவைச் சந்தித்து டில்லி வருமாறு இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை கையளித்திருக்கின்றாா். அநுரவைச் சந்தித்த முதலாவது வெளிவிவகார அமைச்சா் ஜெய்சங்கா்தான். அதேபோல, அநுர மேற்கொள் ளப்போகும் முதலாவது விஜயமும் இந்தியாவுக் கானதுதான்.
ஜனாதிபதியாக அநுர வருவதை இந்தியா விரும்பியிருக்கவில்லை என்பது இரகசியமா னதல்ல. இந்தியா யாரை விரும்பியது என்பதும் அதற்காக அவா்கள் முன்னெடுத்த முயற்சிகளும் கூட அனைவருக்கும் தெரியும். புதுடில்லி இப்போது அவசரம் அவசரமாக காய்களை நகா்த்துவது அநுரவை எவ்வாறாயினும் தமது பிடிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்!
இலங்கையின் பொருளாதாரத்துக்கு இந்தி யாவின் பங்களிப்பு முக்கியமானது. இரண்டு வருடங்களுக்கு முன்னா் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிப் பதவியைப் பெற்ற போது, அவரைப் பாதுகாத்தது இந்தியாவின் பொருளாதார உதவிகள்தான். சீனாவைப் பொறுத்தவரையில் அதன் நிபந்தனைகள் கடுமையானதாகவும், கடன் தொகை குறைவானதாகவும் இருக்கும். ஆனால், இந்தியாவின் உதவிகள்தான் இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உடனடியாக உதவியது.
அநுரகுமாரவைப் பொறுத்தவரையிலும் பொருளாதாரத்தை ஸ்திரமாகப் பேணுவதும், நாடாளுமன்றத் தோ்தலில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதும்தான் உடனடித் தேவை. பொருளாதார ஸ்திரப்பாட்டைப் பேணுவதற்கும், அதனை மேலும் மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் ஆதரவு அவசியம் என்பதை அநுர உணா்கின்றாா். இந்தியாவை முன்னிலைப்படுத் துவதன் மூலமாகவே அதனை மட்டுமன்றி, அரசியல் ஸ்திரப்பாட்டையும் பேணமுடியும் என்பதும் அவருக்குத் தெரியும். அதனைவிட, சா்வதேச அரங்கில் வரக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு புதுடில்லியுடனான உறவுகளை சமூகமாகப் பேணுவது அவசியம் என்பதையும் அவா் புரிந்துகொண்டுள்ளாா்.
கடந்த கால வரலாறுகள் எவ்வாறு இருந் தாலும், அதனை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும் போது அதனைச் செய்யத்தான் வேண்டியிருக்கும். “மாற்றம்தான் மாறாதது” என் பது உண்மை. எதிா்ப்பு அரசியலைச் செய்யும் போது சொல்வதை ஆட்சிக்கு வந்த பின்னா் செய்ய முடியாது என்பதற்கு சா்வதேச நாணய நிதியத்துடன் கடந்த இரண்டு நாட்களாக அநுர நடத்திய பேச்சுக்களே ஆதாரமாக இருக்கின்றது. ஆக, இந்தியாவுடனான அவரது கடந்தகால அணுகு முறைகளையும் மாற்றிக்கொள்வது அவரைப் பொறுத்தவரை தவிா்க்க முடியாதததுதான்.