அந்தந்த அமைச்சுக்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு முன்வைப்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (08) கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
‘இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்துடன் இலங்கை மக்களுக்கு பல வெற்றிகள் கிடைத்துள்ளன’.
‘அந்த வெற்றியின் ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல், சமூக கலாசாரம் மற்றும் பிணைப்பு என்பன மேலும் வலுவடைந்துள்ளன’ என்று அவர் கூறியுள்ளார்.
‘இந்த பிணைப்பை சிலருக்கு ஏற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது’. ‘அதனடிப்படையிலேயே தற்போது சிலர் குரல் எழுப்புகின்றனர். அவற்றை அரசாங்கம் கவனத்திற் கொள்ளாது’ என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
‘குறித்த ஒப்பந்தங்களில் எவ்வித ரகசிய தன்மையும் இல்லை’. ‘அதனடிப்படையில் எந்தவொரு நாட்டினாலும் எம்மை பணம் கொடுத்து வாங்க முடியாது’ என்றும் ‘எம்மை கீழ்படிய செய்ய முடியாது’ என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
‘இலங்கையின் சுயாதீன தன்மையை பாதுகாத்து கொண்டே சகல ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகியுள்ளன’ என்றும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். இதனையடுத்து கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்தியாவுடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை பாராளுமன்றில் சமர்ப்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த காலங்களில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முற்பட்ட போது நாட்டை காட்டிக் கொடுப்பதாக உங்களது தரப்பினரே குற்றஞ்சாட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அமைச்சர் விஜித ஹேரத்திடம் தெரிவித்தார்.
‘எனவே, இந்தியாவுடனான ஒப்பந்தங்களை யாரும் காட்டிக் கொடுப்பென கூறவில்லை’ என்றும் ‘அவை பாராளுமன்றில் முன்வைக்கப்பட வேண்டும்’ என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதன்படி, ‘அந்தந்த அமைச்சுக்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்தியாவுடனான இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்துக்கு முன்வைப்பது தொடர்பில் அறிவிக்கப்படும்’ என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



