02. 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனினால் நேற்றைய தினம் (01) முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் வெளிநாடுகளுக்கு உதவி வழங்குவதற்கு 5,483 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்டைய நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதிகள், வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் வெளிநாடுகளுக்கான ஒதுக்கத்தில் பூட்டானுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த 2,068 கோடி இந்திய ரூபாவை விட அதிகமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதால், அதற்கான ஒதுக்கீடு 245 கோடி இந்திய ரூபாவில் இருந்து 300 கோடி இந்திய ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷிற்கான நிதி ஒதுக்கீடு 120 கோடி இந்திய ரூபாயாக உள்ளதுடன், ஆபிரிக்க நாடுகளுக்கான நிதி உதவி 200 கோடி இந்திய ரூபாவில் இருந்து 225 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஒதுக்கீடு 90 கோடி இந்திய ரூபாவில் இருந்து 60 கோடி இந்திய ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியும் 200 கோடி இந்திய ரூபாவிலிருந்து 100 கோடி இந்திய ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.



