இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இடைநிறுத்தப்பட்ட இலங்கை – பாகிஸ்தான் கூட்டு இராணுவ பயிற்சி

இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையே இடம்பெறவிருந்த கூட்டு பயிற்சி நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெறவிருந்த இந்த கூட்டு பயிற்சி நடவடிக்கைக்கு இந்தியா ஆட்சேபனை எழுப்பியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சி நடவடிக்கையை நிறுத்துவதற்கான முடிவு தொடர்பில் இலங்கை அல்லது பாகிஸ்தானிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்றும், இந்தியா தமது எதிர்ப்பை நேரடியாக இலங்கை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதனை அடுத்து அந்த நடவடிக்கை ரத்தானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீன கடற்படையுடன் நெருங்கிய உறவை பேணி வரும் நிலையில், இந்த பயிற்சி தங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாம் என்று இந்தியா கருதுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த இலங்கை கடற்படை பேச்சாளர், குறித்த செய்தியில் சம்பந்தப்பட்ட கூட்டு பயிற்சி இடம்பெறவிருந்த திகதி உள்ளிட்ட விபரங்கள் வெளிப்படுத்தப்படாததால் அது தொடர்பாக கருத்து வெளியிட முடியாது என்று குறிப்பிட்டார்.

அதேநேரம், பல நாடுகளைச் சேர்ந்த கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வருகை தருவதாகவும், போதிய காலம் காணப்படுமாயின் கூட்டு பயிற்சி நடவடிக்கைகள் நடத்தப்படும் என்றும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.