இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் சட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் – சபாநாயகா் உறுதி

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அதிகாரப்பூர்வ சட்டமாக அறிவித்து கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் மேலும் பல சட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கமைய சட்டவாக்கத்தின் போது உள்வாங்கப்பட்ட அனைத்து திருத்தங்களும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

சட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், சாத்தியமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் சட்டமா அதிபர் அலுவலகத்தினால் ஒவ்வொரு சட்டமூலமும் ஆய்வுக்களுக்கு உட்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

மேலும், சட்டமா அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற அதிகாரிகள் குழு இரண்டாவது மீளாய்வுகளை மேற்கொண்ட பின்னரே சபாநாயகர் கையெழுத்திடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 24 ஆம் திகதி 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.