நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை தடுக்கும் வகையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது.
குறித்த சட்டமூலத்தை இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் சபையில் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தன. இதனையடுத்து குறித்த சட்டமூலத்தை இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துகொள்வது தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துமாறு கோரப்பட்டது.
அதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை இன்றைய தினம் நடத்தும் தீர்மானம் 33 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், தாம் அதனை முழுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார்.