ஆயிரம் வியாக்கியானங்களுக்கு அப்பால்…போராட்டத்தை இனி எங்கிருந்து தொடங்குவது எப்படி தொடங்குவது? : மு. திருநாவுக்கரசு

கட்டுண்டோம், சிறைப்பட்டோம், மிச்சம் மிகுதி இல்லாமல் எல்லாவற்றையும் இழந் தோம். ஆயினும் நாம் மீண்டெழ  வேண்டும், ஆயிரம் விளக்கங்களும் பல்லாயிரம் வியாக்கியானங்களும் சொல்லப்படுவது சரி ஆனால் அதற்கும் அப்பால்  ஈழத் தமிழரின் விடிவுக்கான பாதையை இனி எங்கிருந்து தொடங்குவது? எப்படி தொடங்குவது? என்ற  வினாவுக்கான பதிலை காண வேண்டியது முதன்மையானது.
மாண்டுபோன புதைகுழியிலிருந்தே எழுச்சியும் தொடங்கும் ஒருவர் தான் விழுந்து கிடைக்கும் இடத்தி லிருந்துதான் எழ வேண்டுமே தவிர வானத்தி லிருந்தோ அல்லது எங்கோ தொலை தூரத்தில் இருந்தோ  எழமுடியாது.
“இந்த உலகம் எப்படி காணப்படுகின்றது என்பதை பற்றி மட்டுந்தான் இதுவரை தத்துவ ஞானிகள் பல்வேறு வழிகளிலும் வியாக்கியானப் படுத்தி உள்ளார்கள். ஆனால் இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் அதை எப்படி மாற்றுவது  என்பதுதான்” – காரல் மார்க்ஸ்.  ( “ Philosophers have hitherto only interpreted the world in various ways , the point is change it” – Karl Marx)  அனைவரும் வீழ்ந்து உழன்று தங்களுக்குள் பலவாறு மோதுண்டு கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு மேற்படி காள் மார்க்ஸின் தத்துவ ஞானக்  கூற்று ஒரு  திறவுகோலாய் அமையவல் லது.
கூரையில் இருந்து விழுந்து திகைத்துப் போன பல்லியும் தன்னையும்  தான் வீழ்ந்து கிடக்கும்  இடத்தையும் சுதாகரித்து, மீண்டும் கூரைக்குப் போக வேண்டுமானாலும் வீழ்ந்த இடத்தில் இருந்துதான் மெல்ல ஊர்ந்து அக்கம் பக்கமாய் நகர்ந்து பொருத்தமாக மேல் நோக்கி போகிறது.
முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு பின் ஈழத் தமிழர் இனி எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது.  உள்நாட்டு-வெளிநாட்டு களநிலை யதார்த்தத்தை கருத்துக்கு எடுத்து அந்த இரண்டு அந்தலைகளையும் ஒன்றோடு ஒன்று முடிவதன் மூலம் ஈழத் தமிழர் சார்ந்த அரசியலில் ஒரு புதிய உராய்வையும் அரசியற் பெரு  வெடிப்பையும்  ஏற் படுத்த முடியும்.
உள்நாட்டு களநிலை யதார்த்தம்  கண்ணுக் குத் தெரியும் அளவுக்கு இயல்பானது. அதாவது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தோடு ஈழத் தமிழரின் அரசியல் வாழ்வு புதைகுழிக்குள் மாண்டுள்ளது. ஆதலால்  மாண்டு கிடக்கும் அந்தப் புதைகுழிக்குள் இருந்துதான் ஈழத்தமிழரின் அரசியலைத் இனித் தொடங்க வேண்டும்.
எதிரி தமிழ் மக்கள் தரப்பில் இருந்து, புலிகளிடம் இருந்த ஆயுதங்களை மட்டும் பறிக்கவில்லை கூடவே தமிழ் மக்களையும் ஆடைகளைந்து நிர்வாணமாக்கி,  நீண்ட பெரும் பண்பாட்டுத் தோலையும் உரித்தெறிந்தார். மேலும் புதைகுழியோடு தமிழ் தேசியத்தை மூடி  முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்றும் நம்பினார்.
ஆதலால் அந்தப் புதைகுழியில் இருந்து தான், அதாவது மனிதனும் பண்பாடும் நிர்வாணம் ஆக்கப்பட்ட அந்தப் புதைகுழியில் இருந்துதான் ஈழத் தமிழரின் அடுத்த கட்ட அரசியலைத் தொடங்க வேண்டும்.
எதிரி  தமிழர் தரப்பில் இருந்த கோட்டை கொத் தளங்களை மட்டும் தகர்க்கவில்லை.  கூடவே தன்னைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த  தர்ம அரண்க ளையும் தகர்த்து தன்னை பெரும் இனப்படு கொலையாளி என்றும் அம்பலப் படுத்தியுள்ளார்.
முதலாவது அர்த்தத்தில் தமிழர் தரப்பின் கையில் இருந்து ஆயுதங்களை பறித்ததற்கு பதிலாக மக்கள் திரளை ஆயுதமாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார்.  உண்மையான அர்த்தத்தில் தற் போதைய சர்வதேச யதார்த்தத்தின் கீழ் மக்கள் திரள் என்பது வெடிகுண்டுகளை விடவும் பலமான ஆயுதமாகும்.
“இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே”என்ற அரசியல் கூற்று மிகவும் ஆழமானது .
இனப்படுகொலைக்கு  எதிராக அந்த படுகொலைக்கு உள்ளான  மக்களிடம்  இயல்பா கவே அந்த எதிரிக்கு எதிராக கோபமும் வெறுப்பும் இருக்கும்.இந்நிலையில் சர்வதேச அரசியல் யதார்த்தத்தை ஒருகணம் பார்ப்போம்.
ஆயுதப் போராட்டங்களை அரசுகள் ஒடுக்கியதால், உருவாகி வரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்.
அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான 2001  பின் லேடனின் தாக்குதலுக்குப்பின் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 2001 செப்டம்பர் 28ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட  இல. 1373 தீர்மானத்தின் அடிப்படையில் உலக அரங்கில் ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் சர்வதேச பயங்கரவாதம் என்ற பட்டியலுக்குள் வரும் நிலை உருவானது.
மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு உயிரும் தன் வாழ்வுக்காக போராடுவது இயல்பு.  எனவே மனிதனின் கூட்டு உரிமைக்கான ஆயுதப் போராட்டங்கள் தடை செய்யப்படும்போது மக்களின் போராட்டங்களுக்கும் எழுச்சிகளுக்கும்  வடிகால் இல்லாமல் போய்விடும். எனவே ஆயுதப் போராட்டங்களை தடை செய்ததற்கு பதிலாக சமாதான வழியிலான  மக்கள் எழுச்சி போராட்டங்களை அனுமதிக்க வேண்டியது தவிர்க்க முடியாத யதார்த்தமாய் மாறியது.
இத்தகைய பின்னணியில் பல ஆசிய நாடுகளிலும்அமெரிக்காவிலும் மக்கள் கிளர்ச்சி போராட்டங்கள் எழுந்தன. இந்த வரிசையில் குறிப்பாக துனீசியா, இலங்கை, பங்களாதேஷ் போன்ற பல நாடுகளில்  மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகளின் வாயிலாக ஆட்சியாளர்கள்   சிம்மாசனத்தைவிட்டுத் துரத்தி யடிக்கப்பட்டனர். மேலும் பல ஆசிய நாடுகளிலும் அமெரிக்கா உட்பட வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள்  மக்களுக்கு எதிரான ஆளும் குழாங்களை  பணிய வைத்தன.
குறிப்பாக அமெரிக்காவில் 2020 மே கடைசி வாரத்தில் கறுப்பினத்தவரான  George  Floyd ஐ  வெள்ளையின  போலீஸ் அதிகாரி கழுத் தில் முழங்காலை வைத்து அழுத்தி மூச்சுத் திணறவைத்தே படுகொலை செய்ததற்கு எதிராக அமெரிக்கா எங்கும் கறுப்பின மக்களின் எழுச்சி போராட்டங்கள் தெருக்களை நிரப்பின.
அமெரிக்காவில் தொடர்ந்து எட்டு வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த  அரைக் கறுப்பு இனத்தவரான திரு  பராக் ஒபாமாவின் பதவிக்  காலம் முடிந்த ஒன்றரை வருடங்களுக்குள் அவர் அமெரிக்கா ஆளும் வர்க்கத்தின் இத்தகைய இன வெறுப்புச் செயலுக்கு எதிராகவும் கொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு ஆதரவாகவும் எழுந்த  மக்கள் போராட்டங்களுக்கு முற்றிலும் ஆதரவாக ஒரு பெரும் காத்திரமான அறிக்கையை 2020 யூன் 3 தேதி வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் அவர் வெளியிட்ட வாசகங்கள் பெரிதும் கவனத்திற்குரியவை. மக்கள் கிளர்ச்சி போராட்டங்களுக்கு எதிராக பேசி வருவோர்களை நோக்கி பின்வரு மாறு கூறினார் :
“போராட்டங்களுக்கு எதிராக பேசுவோர் களே கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்;இந்த நாடு போராட்டங்கள் மீது கட்டி எழுப்பப்பட்டது. அதுதான் அமெரிக்க விடுதலைப் புரட்சி.”
“இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு  அடியும்,  மக்களின் சுதந்திரத்தை விரிவாக்குவதற்கான ஒவ்வொரு அடியும், எமது ஆழமான இலட்சியங்களை வெளிப் படுத்துவதற்கான ஒவ்வொரு அடியும் ஆளும் அதிகார வர்க்கத்தினரை நிலைகுலையச் செய்த இத்தகைய போராட்டங்கள் வாயிலாகவே முன் னெடுக்கப்பட்டன”. திரு , ஒபாமாவின்  வலுவான இந்த அறிக்கை சாதாரண வெள்ளையர்களின் மனங்களை கவ்விப் பிடித்தது.  பதவியில் இருந்த ஜனாதிபதி உட்பட ஆழும் குழாத்தை ஈடாட வைத்தது.
போராட்டம் குறிப்பிடக்கூடிய வெற்றியை அடைந்தது. தண்டனைகளுக்கு அப்பால் பரந்த அமெரிக்க மக்கள் அபிப்பிராயம் கறுப்பின ஒடுக்கு முறைக்கு எதிராக முன்னேற்றகரமான திரட்சியை அடைந்தது.
மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் காலம் இது இன்றைய உலகளாவிய சூழலில் இனப்படு கொலைக்கு  எதிராக மக்கள் எழுச்சிப் போரா ட்டங்கள் நிகழக்கூடியதற்கான காலநேர தட்ப வெப்ப சூழல் கனிவடைந்து இருக்கிறது.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின் னான கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் தலைமைகள் இதனை முன்னெடுக்க முற்றிலும் தவறிவிட்டன என்பது மட்டுமன்றி , அதாவது புதைகுழிகளை முன்னெடுப்பதற்கு பதிலாக புதை குழிகளை மூடி மறைத்து சிங்கள இனவாத ஆட்சிக்கு உதவி செய்யும் முகமாகவே அரசியல் நடத்தி வருகின்றன.
குறிப்பாக முதலாவதாக 2010 ஆம் ஆண்டு தேர்தல் அரங்கை இலங்கை அரசு திறந்து விட்டது. அந்தத் தேர்தல் சூழலில் இனப்படுகொலையை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு செங்கம்பளம் என விரிந்து. ஆனால் அப்போது வஞ்சகம் இன்றி எல்லா தமிழ்த் தலைகளும்  இனப்படுகொலைக்கு எதிராக அந்தத் தேர்தலை பயன்படுத்துவதற்கு பதிலாக இனப்படுகொலை புரிந்த இராணுவ தலைவனுக்கு வாக்களிக்குமாறு  மக்களை தூண்டி அந்த மக்கள் பாதக அரசியலை நிறைவேற்றினார்கள்.
இது விடயத்தில்  களத்தில் உள்ள எந்தொரு  தமிழ்த் தலைவரும் விதிவிலக்கானவர் அல்ல.
2022 ஆம் ஆண்டு  பதவியில் இருந்த ராஜபக்சாக்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி பெரிதாய் எழுந்தபோது இராணுவ மிடுக்குமிக்க இரண்டு ராஜபக்சகளாலும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பொலீஸ் —  இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது போனது.
ராஜபக்சாக்கள்மக்களை கடுமையாக ராணு வம் கொண்டு அடக்க இயலாமல் போன தன் உளவியல் காரணம் என்னவெனில் ஓர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் சிங்கள மக்களின் மனநிலை முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையோடு இணைந்து போக தொடங்கிவிடும். இராணுவம் முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை புரிந்துள்ளதுதான் என்ற கருத்தை சிங்கள மக்கள் நம்பத் தொடங்குவர்.
இப்பின்னணியில் இராணுவம் தன் கௌர வத்தை இழக்கும். இத்தகைய இராணுவத்துக்கு எதிராக மக்கள்  மேலும் கிளர்ச்சிகளை பெரிதும் முன்னெடுக்கலாம் என்பதுடன் கூடவே  முள்ளி வாய்க்கால் படுகொலை என்ற  பழியை சுமந்து திரியும் ராணுவம், சிங்கள மக்கள் மேலேயே ராணுவ நடவடிக்கை எடுத்தால்  மேலும் மதிப்பி ழந்து அவமானத்துக்கு உள்ளாக நேரும் என்ற அச்சம் ஆட்சியாளர்கள் மத்தியிலும் இராணு வத்தின் மத்தியிலும் நிலவியது.  ஆதலால் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலையின் பின்னணியில் ஆட்சியாளர்களால் மக்களை நோக்கி மீண்டும் துப்பாக்கிகளை உயர்த்த முடியவில்லை.
இத்தகைய ஒரு பின்னணியில் தமிழ் தலைவர்கள்  ஜனநாயக பூர்வமான மக்கள் கிளர்ச்சிப்  போராட்டங்களை 2010 ஆண்டு தேர்தலுடன் முன்னெடுத்து இருந்தால் சிங்களஇனப்படு கொலை அரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெருக்கடிகளுக்கு உள்ளாக நேர்ந்திருக்கும். இனப் படுகொலை வாயிலாக  அரசுக்கு ஏற்பட்டபெரும்  காயத்தினதும் அபகீத்தியினதும் பின்னணியில் தமிழ் தலைவர்களுக்கு எதிராக, அமைதிவழிக் கிளர்சியில் ஈடுபடக்கூடிய தமிழ் மக்களுக்கு எதிராக  அரசால் துப்பாக்கிப் பிரயோகங்கள் செய்ய முடியாது.
இத்தகைய ஒரு வாய்ப்பான வரலாற்று — அரசியல்பின்னணியில் இனப்படுகொ லையை முன்னெடுப்பதற்கு பதிலாக இனப்படு கொலைக்கான விசாரணை முடிவடைந்துவிட்டது என்று மக்களுக்கு கண்ணைக் குத்திப் பொய் சொல்லும் அளவுக்கு இனப்படுகொலை ஆட்சி யாளரின் சேவகர்களாக தமிழ் தலைவர்கள் செயற் பட்டனர்.
வேட்டைக்காரனுக்கு தெரியும் உடும் புக்கு வால் இருப்பது அதனை அதன் வாலால் கட்டிப் போடுவதற்கே என்று. சிங்களத் தலைவர்களுக்கு தெரியும் தமிழருக்கு தலைவர்கள் இருப்பது தமிழரை தமிழ் தலைவர்களால் கட்டி போடுவதற்கே. ஆனால்  இனியாவது விதிவிலக்கின்றி இந்த தமிழ் தலைவர்கள் அனைவரும் இனப்படு கொலைக்கு எதிரான  மக்கள் போராட்டத்தை இதய சுத்தியுடன் முன்னெடுப்பார்களே ஆயின் வரலாறு இவர்களின் பாவங்களை மன்னித்திடக்கூடும்.
1914 ஆம் ஆண்டு 11 இலட்சம் ஆர்மேனிய கிறிஸ்தவ மக்கள் இஸ்லாமிய துருக்கிய பேரரசால் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இன்றும் குரல் எழுப்பப்படும் நிலை இருக்கையில் ஒன்றரை தசாப்தங்களுக்குள் நிகழ்ந்து முடிந்த இனப்படுகொலை ஒன்றும் பழையதல்ல. இனியும் அதனை புது மெருகுடனும் புது வீச்சுடனும் முன்னெடுக்க முடியும்.
எங்கிருந்து தமிழ் மக்களின் போராட்டத்தை தொடங்குவது என்ற கேள்விக்கான பதில். எந்தப் புதைகுழியில்  தமிழ் மக்களின் தலைவிதி முடிந்தது என்று எதிரி நினைத்தாரோ,  அங்கு அந்தப் புதைகுழியில் இருந்து தமிழ் மக்கள்  தமது அந்தப்போராட்டத்தை தொடங்க வேண்டும்.
இனி எப்படி தொடங்குவது என்பது அடுத்த கட்டுரையில் தொடரும்…