ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மூதூரில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (8) காலை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் சுலோகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஐந்து வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வருகின்ற தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலைகளில் சகல வேலைகளையும் தாம் செய்து வருகின்றோம். கடந்த அரசாங்கம் எமக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்குவதாக தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் நியமனம் வழங்கவில்லை. அதனையே இந்த அரசாங்கமும் செய்கிறது. எனவே பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் தங்களுக்கு இந்த அரசாங்கம் ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.