வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியமைத்த அரசாங்கம், தற்போது அந்த மக்களின் பிரச்சினைகளை புறக்கணித்து செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இணைந்து யாழ்ப்பாணத்தில் இன்று மே தின பேரணி மற்றும் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இதில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தி அரசியல் தீர்வை வழங்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்த போதிலும் தற்போது அந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. போருக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதுடன் போரின் போது இடம்பெற்ற அநீதிகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் காணி பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. மாறாக பொருளாதார பிரச்சினை மாத்திரமே இலங்கை இருப்பதாக அரசாங்கம் கூறி வருகின்றது.
இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களது பிரதான கோரிக்கையாக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



