அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி வழங்கி ஆசனமேறிய அரசு அதை நிறைவேற்ற தவறியுள்ளது என தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் இன்றையதினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
30 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டு இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பானது தொடர்ச்சியாக தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது.
அந்தவகையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த நேரம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கைகள் உள்ளடங்கிய கடிதம் மற்றும் அவர்களுடைய பெயர் பட்டியலை கையளித்திருந்தோம்.
அத்துடன் கடந்த தை மாதம் 8ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோருக்கு மின்னஞ்சல் ஊடாக இந்த கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக கடந்த பங்குனி மாதம் பிரதமரை சந்தித்து, இது குறித்து அவருடன் கலந்துரையாடி பெயர் பட்டியலையும் கையளித்திருந்தோம். இதனையும் ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இதன் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற செய்தியையும் கூறினோம்.
இந்த அரசானது அரசியல் கைதிகளை விடுவதாக வாக்குறுதி வழங்கி ஆசனமேறியது. ஆனால் இதுவரைக்கும் ஒரு அரசியல் கைதிகூட இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என்பது தொடர்ச்சியாக ஏமாற்றத்தை தருகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருக்கும்போது, கடந்த காலத்தில் தற்போதைய ஜனாதிபதியை நேரில் தொடர்புகொண்டு கதைத்தவேளை தாங்கள் ஆட்சிக்கு வந்து 24 மணிநேரத்தில் விடுதலை செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டவர்கள் இன்று சாட்சிகளாக இருக்கின்றனர்.
அதேநேரம் அமைச்சர் சந்திரசேகரனை நேரில் சந்தித்து கைதிகளின் விடுதலை தொடர்பாக கோரிக்கை முன்வைத்திருந்தவேளை எங்களை விட தாங்களே கைதிகளின் விடயத்தில் அதிகம் கவனம் எடுப்பதாகவும், கடந்த காலங்களில் இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வலுவான கோரிக்கை முன்வைத்து வந்ததாகவும் கூறினார். ஆனால் அதிகாரம் அவர்களிடம் கிடைத்தும்கூட கைதிகளின் விடுதலை என்பது சாத்தியப்படவில்லை.
30 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் மீதமாக 10 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றார்கள். போர் நிறைவுற்று 16 ஆண்டுகள் கழிந்துள்ள இந்த காலத்தில் எமது நாட்டில் வாழக்கூடிய ஒரு நல்லெண்ண சூழலை உருவாக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்றார்.