அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடரும் கையெழுத்து வேட்டை – ஜனாதிபதியிடம் நாளை கையளிப்பு

மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக “ஒன்றுபட்டு குரலுயர்த்தி உறவுகளை சிறைமீட்போம்” வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவரும் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பானது, ஜனாதிபதியின் வடக்கு வருகையை முன்னி்ட்டு “ஒற்றைக் கையெழுத்தில் -நம் உறவுகளை சிறைமீட்போம்” என்கின்ற தொனிப்பொருளில் முதற்கட்ட கையெழுத்து வேட்டையினை ஆரம்பித்துள்ளது.

சமூகப் பொதுவெளியில் செயலாற்றுகின்ற குடிமக்கள் அமைப்புகளிடமிருந்து கையெழுத்துக்களை பெறும் நிகழ்வின் இரண்டாம் நாள், இன்று யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் தொடக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தென்னிந்திய திருச்சபைகளின் யாழ்.ஆதீனம் பேராயர் கலாநிதி வே.பத்மநாதன், யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்னம் அடிகளார், இலங்கை திரு அவைகளின் யாழ்.குருமுதல்வர் திருப்பணி செல்வன் அடிகளார் எனப் பலரும் ஜனாதிபதிக்கான மகஜரில் தன்னார்வத்தோடு தமது கையொப்பங்களை இட்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.

யாழ். நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த சுவாமிகளால் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட முதல்நாள் நிகழ்வில், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் சமயப் பெரியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகநலச் செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது பங்கேற்பினை நல்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப் பொருத்தமான இந்த மனிதநேய செயற்கருமத்தின் மூலம், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்பதாக தமது உற்ற உறவுகள் சிறைமீண்டு விடுதலைபெற்று வீடு திரும்புவார்கள் என்ற பெரும் நம்பிக்கையில் 14 அரசியல் கைதிகளுடைய குடும்பத்தினரும் ஆவலுடன் காத்திருப்பதாக தெரியவருகிறது.

இந்நிலையில், திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர், நாளைய தினம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் ஜனாதிபதியிடம் நேரில் கையளிக்கப்படவுள்ளது.