புதிய அரசியலமைப்பு மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை தமிழரசு கட்சி புறக்கணித்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொடர்பான அழைப்புக் கடிதம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக் குமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரால் இலங்கை தமிழரசு கட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
‘பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒருதலை பட்சமாக தீர்மானங்களை நிறைவேற்றக் கூடியதான பலத்தில் அரசாங்கம் உள்ள நிலையில், அரசியல் தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் உள்ள தமிழ் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையுடன் தொடர்புடைய அறுதிப் பெரும்பான்மை நிலைப்பாட்டை தமிழ் மக்கள் சார்பாக வெளிப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த கடிதத்துக்கு பதிலளித்துள்ள இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடிதம் தொடர்பில் தங்களது மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதன்படி, ‘புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாலும், அதற்கான வரைவு எதுவும் சமர்ப்பிக்கப்படாத நிலையிலும் அரசியலமைப்பு வரைவு தொடர்பில் தற்போது விவாதிப்பது பொருத்தமற்றது’ என்று இலங்கை தமிழரசு கட்சியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ‘தங்களது கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து வலியுறுத்தி வரும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு இன்னும் வலுவுள்ளதாகவே பேணப்படும்’ என்றும் மத்திய செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசாங்கம் அதன் அரசியலமைப்பு உருவாக்க முன்மொழிவை துரிதமாக முன் வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ‘இதன்படி, உரிய நேரம் வரும் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடலாம்’ என்றும், இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.