அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் மனோ

தேர்தல் காலத்தில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றம் குறித்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது? என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் டேவிட் லெம்மி அறிவித்த தடைகள், இலங்கையில் தேசிய நல்லிணக்க செயற்பாட்டை குழப்புகிறது என இலங்கை வெளிநாட்டமைச்சர் நண்பர் விஜித ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி தமது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவொன்றை இட்டுள்ள மனோகணேசன், ‘இன்று இந்நாட்டில் இனவாதம் பகிரங்கமாக பேச படுவதில்லை’ என்று கூறியுள்ளார்.  ‘அதற்கு காரணம் ஜேவிபி அல்ல. அன்று நாட்டில் நடைபெற்ற ‘அரகல’ என்ற போராட்டத்தின் போது, அதற்கு முன் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த பெரும்பாலான சிங்கள இளையோர், இனி இனவாதம் சரி வாராது என்று கை விட்டு விட்டார்கள்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

‘அது நல்லது. ஆனால், அதனூடாக மட்டும் நிரந்தர நல்லிணக்கத்தை கொண்டு வராது’. ‘நிலைமை மீண்டும் மாறலாம். ஆகவே காலம் கடக்கும் முன், உறுதி அளித்தபடி, புதிய அரசியலமைப்பு செயற்பாட்டை, முன்னெடுக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  ‘அதை செய்யாமல், தேசிய நல்லிணக்க செயற்பாட்டை, பிரித்தானியா தடைகளை அறிவித்து குழப்புவதாக கூறுவது வேடிக்கையான விடயம்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கூறியுள்ளார்.

‘பொறுப்பு கூற வேண்டியவர்கள் சட்ட விலக்கு பெற இடம் தரமாட்டோம்’ என்று தேர்தல் வாக்குறுதியை வழங்கிய அரசாங்கம் தற்போது பிரித்தானியாவின் தடைகளை விமர்சிக்கிறது’ ‘எனினும் உடனடியாக புதிய அரசியலமைப்பு பணியினை ஆரம்பித்து தேசிய நல்லிணக்க இலக்கை அடைய வேண்டும். அதுதான் பிரித்தானிய அரசாங்கத்துக்கு வழங்கக்கூடிய சரியான பதிலாக இருக்க முடியும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.