அரசாங்கம் அறிவித்த மானியங்கள், சம்பள அதிகரிப்பை அமுல்படுத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

செப்ரெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னரே அனைத்து சம்பள அதிகரிப்பு மற்றும் மானியங்களை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இது குறித்து உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அரசாங்கம் தற்போது சம்பள அதிகரிப்பு, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மானியங்களை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், திடீரென எடுக்கப்பட்ட இவ்வாறான தீர்மானங்களை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அமுல்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘அரசாங்கம் முன்மொழிவுகளை கொண்டு வரலாம். எவ்வாறாயினும், செப்ரெம்பர் 21 வரை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

கணிசமான காலத்திற்கு திட்டமிடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த திட்டங்களை நிறுத்த வேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். ஆனால் அவற்றை ஒரு மாதம் தாமதப்படுத்த வேண்டும்” என்றார்.