இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அண்மையில் வெளியிட்ட தீர்மானம், பல தசாப்தங்களாகப் புறக் கணிக்கப்பட்டிருந்த பெருந்தோட்ட மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக மாறியுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய முதுகெலும்பாக திகழும் மலையக பெருந்தோட்ட மக்கள் காணி உரிமை இன்றி இதுவரை காலமும் வஞ் சிக்கப்பட்டமை அமைச்சரவையின் தீர்மானங்களை அறி விக்கும் ஊடக அறிக்கையின் ஊடாக மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையின்படி, “தித்வா புயல் அனர்த்தத்தால் முழுமையாக அல்லது பகுதியளவில் வீடுகள் சேதமடைந்த மற்றும் மண்சரிவு ஆபத்துக்கள் காணப்படுகின்ற இடங்களில் வசிக்கின்ற தோட்டத் தொழி லாளர் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம்” என்ற தலைப்பில் குறித்த தீர்மானம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
“தித்வா புயல் அனர்த்தத்தை அடுத்து வெளி யிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆலோசனைகளுக்கமைய, வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கான வீடமைத்தல் மற்றும் புனரமைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் வகுக்கப்பட்டிருப்பினும், அச்சுற்றறிக்கையின் ஆலோசனை களுக்கமைய தோட்டத் தொழிலாளர் வதிவிடதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கான நிவாரணங்களை வழங் குவதற்கு விசேட ஏற்பாடுகள் இச்சுற்றறிக்கையில் குறிப் பிடப்படவில்லை. அதனால், தோட்டக் கம்பனிகளால் நிர்வகிக் கப்படுகின்ற தோட்டங்களில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் வீடுகள், தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வேறு இயற்கை அனர்த்தங்களால் முழுமையான பாதிப்புக் களுக்கு உள்ளாகியமை/மண்சரிவால் அதி ஆபத்துக்குள்ளாகியமை/ பகுதியளவில் பாதிப்படைந்து அவற்றின் பயன் பாட்டுக் காலம் முடிவடைந்தமை போன்றன உறுதிப் படுத்தப் படுகின்ற சந்தர்ப்பங்களில், பாதுகாப்பு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மற்றும் வீட்டுத் திட்டவரைபடத்திற்கமைய 650 சதுர அடி வீடொன்றை அமைப்பதற்காகக் கட்டம் கட்டமாக 05 மில்லியன் ரூபாய்களை (50 இலட்சம்) அரசு வழங்கி, அவ்வாறான தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை அமல் படுத்துவதற்குத் திட்ட மிடப்பட்டுள்ளது.
குறித்த தொழிலாளிக்கு அவர்கள் வசித்து வருகின்ற தோட்டத்திலேயே பாதுகாப்பான இடத்தில் 10 பேர்ச்சஸ் காணித்துண்டு அந்தந்த தோட்டக் கம்பனி களால் வழங்குவதற்கும், தோட்டத் தொழிலாளரின் சேவை தொடர்ந்தும் தேவையல்லவென தோட்டக் கம்பனி தீர்மானிக்கின்ற போது, தொழிலாளரிடமுள்ள காணியில் அல்லது வழங்கப்படுகின்ற 05 மில்லியன் ரூபாய்களில் காணியொன்றைக் கொள்வனவு செய்து வீட்டை அமைப்பதற்கும் உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் வசதியளிக்கப்படும்.
அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான படிமுறைகளை மேற் கொள்வதற்கு ஜனாதிபதியும், பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” என்று விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய அறிக்கையானது, மலையகப் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான பாகுபாட்டை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்ட ஆவணமாகத் திகழ்கிறது.
அறிக்கையின் தொடக்கத்திலேயே, “சுற்றறிக்கை ஆலோசனைகளில் தோட்டத் தொழிலாளர்களுக்கு விசேட ஏற்பாடுகள் குறிப்பிடப்படவில்லை” என்ற வாசகம் முக்கியமானது. இலங்கை அரசாங்கம் ஒரு பொதுவான அனர்த்த நிவாரணத் திட்டத்தை வகுக்கும்போது, தோட் டப்புறங்களை ஒரு தனித்துவமான நிலப்பரப்பாகக் கருதத் தவறியதை இது காட்டுகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் ‘குடிமக்கள்’ என்பதை விட ‘தோட்ட வதிவிடதாரர்களாக’ மட்டுமே பார்க்கப்படும் நிலையை இது மாற்ற முற்படுகிறது. இந்த அறிக்கையின் மிக முக்கியமான அம்சம் ‘10 பேர்ச்சஸ் காணி’ தொடர்பான முடிவாகும். பெருந்தோட்ட தொழிலாளர்கள் தற்போது வசிக்கும் லயன் குடியிருப்புகள் என்பவை ஒரு சிறிய அறையை மட்டுமே கொண்டவை, அதன் நிலம் கம்பனிக்குச் சொந்தமானது. ஆனால் 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும்போது, ஒரு தொழிலாளி அந்த நிலத்தின் உரிமையாளராக மாறுகிறார். எவ்வாறாயினும் அவ்வாறு வழங்கப்படுகிற காணிக்கு உறுதி பத்திரம் வழங்கப்படுமா? என்ற அச்சமும் நிலவுகிறது.
மறுபுறம் மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள இடங்களிலிருந்து மக்களை அப்புறப்படுத்தி, “பாது காப்பான இடங்களில்” காணி வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை, அவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்கிறது. குறிப்பாக மலையகப் பகுதிகளில் பெரும்பாலான தோட்டக் குடியிருப்புகள் சரிவான மற்றும் பாதுகாப்பற்ற மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளன.
புயல் மற்றும் கடும் மழைக் காலங்களில் இந்த மக்கள் நிலச்சரிவு அபாயத்தை நேரடியாக எதிர் கொள்கின்றனர். அமைச்சரவை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது போல், பல வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்து ‘பயன்பாட்டு காலம்’ முடிவடைந்த நிலையில் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட 10க்கு 12 அடி அளவுள்ள லயன் அறைகளில் இன்றும் பல குடும்பங்கள் ஒன்றாக வாழ வேண்டிய அவலநிலை உள்ளது.
இந்த வீடுகளில் போதிய, சுகாதாரம் அல்லது தனிமனித இடைவெளி கிடையாது. இது அம்மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு இருக்கையில் அரசாங் கத்தின் இந்த தீர்மானம் ஒரு சாதக விடயமாகவே கருத வேண்டியுள்ளது. இதேவேளை, அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ள ஒரு நுணுக்கமான விடயம்: “தோட்டத் தொழிலாளரின் சேவை தொடர்ந்தும் தேவையல்லவென தோட்டக் கம்பனி தீர்மானிக்கின்ற போது.” என்பது. மலை யகத்தில் ஒரு தொழிலாளி வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலோ அல்லது நீக்கப்பட்டாலோ, அவர் தனது குடியிருப்பையும் காலி செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது.
ஆனால் இந்த புதிய தீர்மானம், வேலையை இழந்தாலும் தொழிலாளிக்குக் காணி கிடைப்பதையும் அல்லது அவர் அந்தப் பணத்தைக் கொண்டு வெளியே காணி வாங்குவதையும் உறுதிப்படுத்துகிறது. இது தொழி லாளர்களைக் கம்பனிகளின் பிடியிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு நிலத்தின் மீதான சுதந்திரத்தை வழங்குகிறது. அதேநேரம், 650 சதுர அடி, இது ஒரு சிறிய குடும்பம் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச இடவசதியாகும்.
லயன் அறைகளின் குறுகிய சூழலோடு ஒப்பிடும்போது இது ஒரு பாரிய முன்னேற்றம். இவ் வாறான சாதக அம்சங்கள் காணப்படுகின்ற போதும் அரசாங்கம் ஒதுக்குவதாக கூறுகின்ற 5 மில்லியன் ரூபாய் என்பது தற்போதைய கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்துடன் ஒப்பிடுகையில் போதுமானதா? என்பது கேள்விக்குறியே. இருப்பினும், இது ஒரு ஆரம்பக் கட்ட ஊக்கத்தொகையாகவும், காணி உரிமைக்கான அங்கீகாரமாகவும் அமைகிறது.
எனினும் இதனை நிலமட்டத்தில் நடைமுறைப் படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. காணி வழங்குவதில் தோட்டக் கம்பனிகள் காட்டும் தயக்கம் மற்றும் இழுபறி நிலைகள் இத்திட்டத்தைத் தாமதப்படுத்தலாம். ஏற்கனவே இந்திய வீட்டு திட்டத்தில் இந்த இழுபறி நிலை காணப்படுகின்றது. குறிப்பாக இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் வீடுகளுக்கான காணிகள் பெரும்பாலும் தேயிலை உற்பத்தி செய்ய முடியாத கைவிடப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற காணிகளாகவே உள்ளன.
இந்த நிலை தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்திலும் நீடிக்குமாயின் மீண்டும் ஒருமுறை மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்பார்ப்பு கேள்வி குறியாகும். பெருந்தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க வெறும் நிதி ஒதுக்கீடு மட்டும் போதாது. அதற்கான ஒரு விரிவான கட்டமைப்பு தேவையாக உள்ளது. வழங்கப்படவுள்ள 10 பேர்ச்சஸ் காணிக்குத் தெளிவான மற்றும் சட்டபூர்வமான உறுதிப்பத்திரங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
தோட்டக் குடியிருப்புகளை ‘கிராமங்களாக’ அங்கீ கரிப்பதன் மூலம், பிரதேச செயலகங்கள் ஊடாக அரச அபிவிருத்தித் திட்டங்கள் நேரடியாக மக்களைச் சென்ற டையச் செய்ய வேண்டும். இந்த அமைச்சரவை முடிவானது, பெருந்தோட்ட மக்களின் காணி உரிமையை நோக்கிய பயணத்தில் ஒரு மைல்கல். எனினும், அறிக்கை சொல்வது போல இந்த 10 பேர்ச்சஸ் காணிக்குரிய சட்டபூர்வமான உறுதிப்பத்திரம் வழங்கப்படுவதை அரசாங் கம் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான், அந்த மக்கள் நிம்மதியாகத் தமது சொந்த நிலத்தில் தலைமுறை தலை முறையாக வாழ முடியும்.”



