‘அரகலய’ போராட்ட விவகாரம்: ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு

2022ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ‘அரகலய’ போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, அப்போதைய பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் ஊடாக, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய, ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2ஆவது சரத்தின் கீழ் பிரகடனப்படுத்திய, அவசரகால நிலை, தன்னிச்சையானதும், அதிகாரம் அற்றதுமான செயற்பாடு என்று மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் யசந்த கோத்தாகொட ஆகியோரே இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.

எனினும், மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் மற்றுமொரு உறுப்பினரான நீதியரசர் அர்ஜூன ஒபேசேகர தமது தீர்மானத்தை அறிவிக்கும்போது, பதில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை அடிப்படை மனித உரிமைகளை மீறவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மனுதாரர்களின் வழக்குச் செலவுக்கான கட்டணங்களை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அத்துடன், மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், லிபரல் இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளும் இணைந்து விடயம் தொடர்பான அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தன.