‘அம்ஷிகாவின் அம்மாவாக அவளின் வேதனைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். அவளுக்கு இந்தச் சமூகத்தில் வாழப்பிடிக்கவில்லை அதனால் தான் தன்னை மாய்ந்துக்கொள்ளும் தீர்மானத்தை எடுத்துள்ளாள். எனது மகளுக்கு நடந்தது இனி எந்தவொரு பிள்ளைக்கும் நடக்கக் கூடாது…….’ ‘…….எனது மகளின் மரணம் சமூகத்திற்கு செய்தி யொன்றை சொல்லியுள்ளது. அவளது மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீதி நிலை நாட்டப்பட வேண்டும். இனி எந்தவொரு பிள்ளைக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று நா தளதளக்க, கண்ணீர் சொரியக் கூறினார் மாணவி அம்ஷிகாவின் தயார்.
16வயதுடைய டில்ஷி அம்ஷிகா பல கனவுகளுடன் கல்வியில் அக்கறையுடன் ஈடு பட்டிருந்த பாடசாலை மாணவி. அத்தகைய மாணவி தன்னுடைய கனவுகளை, உறவுகளை தொலைத்து தன்னை மாய்த்துக்கொள்ளும் மிக இறுக்கமான முடிவினை கனத்த இதயத்துடன் எடுத்திருக்கின்றார்.
மாணவி இத்தகைய முடிவினை எடுத்துக் கொள்வதற்கு பெற்றோருக்கு அடுத்தபடியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களின் நடத்தைகளும், வெறுப்புப்பேச்சுக்களும் தான் பிரதான கார ணங்களாக அமைந்திருக்கின்றன என்பது மறுப் பதற்கில்லை.
இந்நிலையில் தான் கடந்த எட்டாம் திகதி கொழும்பில் திரண்ட பொதுமக்களும், பெற் றோர்களும், அரசியல், சமயத் தலைவர்களும், இளைஞர் யுவதிகளும், மாணவ மாணவியர்களும் அம்ஷிகாவுக்கான நீதிப் போராட்டத்தில் குதித் துள்ளனர்.
குறித்த நீதிப்போராட்டம் வெறுமனே கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாக கொண்டதல்ல, கொட்டும் மழைக்கு மத்தியில் இராமநாதன் மகளிர் கல்லூரிக்கு முன்னால் கூடிய போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகம் வரையில் பொடிநடையாக பேரணியாக வந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தியதுடன் மகஜரொன்றையும் கைய ளித்துள்ளனர்.
நடந்தது இது தான்கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்தார். குற்றுயிராக இருந்த நிலையில் அவர் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது.
அம்ஷிகா கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள இராமநாதன் மகளிர் கல்வி பயின்று வந்திருந்த நிலையில், கடந்த வருட இறுதியில் அவர் குறித்த பாடசாலையின் கணிதபாட ஆசிரியரால் 2024 ஒக்டோபர் 23ஆம் திகதி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
தனக்கு நிகழ்ந்த கொடூரத்தினை தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய மாணவி, அவர்களுடன் சென்று இராமநாதன் இந்துக்கல்லூரி யின் அதிபரைச் சந்தித்தார். ஆனால் அதிபர் தான் சார்ந்த ஆசிரிய சமூகம் பக்கமே நின்றார். பாடசாலை ஆசிரியருடன் பிரச்சினையென் றால் விடுப்பைப்பெற்று வேறுபாடசாலைக்குச் சென்று கல்வியைத் தொடரலாம். அதற்கு உங்க ளுக்கு பூரண சுதந்திரம் உண்டு என்று கூறி விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முயன்றார்.
இதனையடுத்து செய்வதறியாது தடுமாறிய பெற்றோர் உடனடியாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை நாடினார்கள். ஆனால் அதிகார சபையானது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துவிட்டு வருமாறு அறிவுறுத்தியது. பொலிஸ் நிலையத்துக்கு செல்வதை தவிர்த்துக்கொண்ட பெற்றோர் தமது பிள்ளையை நெருக்கமான வைத்தியரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெறும் செயற்பாடுகளை தொடர்ந்தனர்.
இந்த நிலையில், குறித்த மாணவிக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர் அவரின் நிலைமைகளை நன்குணர்ந்தவராக கொட்டாஞ்சேனை பொலிஸா ரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். 2024 ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸாரால் பெற்றோர் அழைக்கப்பட்டு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து முறைப் பாடளித்திருந்தார். அம்முறைப்பாடு பற்றிய விசாரணைகளை அடுத்து, அச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணிதபாட ஆசிரியர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு சொற்ப காலத்துக்குள்ளேயே கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் பின்னர் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டார். பிணையில் விடுதலையான குறித்த ஆசிரியர், மீண்டும் அதேபாடசாலையில் தனது கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.
இந்நிலையில், அம்ஷிகா கொட்டாஞ் சேனையில் தனது பாடசாலைக்கல்வி நடவடிக் கைளை தொடர்ந்திருந்த நிலையில் பிரத்தியேக வகுப்புக்களுக்கான கொட்டாஞ்சேனையில் அமைந்திருந்த தனியார் கல்வி நிறுவனத்தில் இணைந்தார்.
அங்கு சென்ற அம்ஷிகாவுக்கு எதனை மறந்து புதிய வாழ்க்கையை நோக்கி திரும்ப வேண்டுமென்று கருதினாரோ அதனை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையிலான வார்த் தைப் பிரயோகங்கள் அங்கிருந்த ஆசிரியர் ஒரு வரால் வெளிப்படுத்தப்பட்டன.
அந்த விடயத்தினையும் தனது பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்த அம்ஷிகா மீண்டும் பெற்றோரின் உதவியுடன் தனியார் கல்வி நிறுவன உரிமையாளரை சந்தித்து உரையாடினார்.
ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. தனியார் கல்வி நிறுவன உரிமையாளரிடத்தில் முறைப்
பாடு செய்ததால் அம்ஷிகா தொடர்ந்து அவஸ்தைக்குள்ளாக்கப்பட்டார். அவமானப் படுத்தப்பட்டார். எள்ளி நகையாடப்பட்டார். ஈற்றில், தனக்கு நிகழ்ந்தேறிய அனைத்து விடயங்களையும் குறிப்பாக எழுதிவைத்துவிட்டு தன்னையே மாய்த்துக்கொள்ளும் முடிவினை எடுத்துக்கொண்டார்.
திரைமறைவு சங்கதி அம்ஷிகா தன்னைச்சுற்றி நடந்ததை அறிந்திருக்க மாட்டார். ஏனென்றால் அவர் அப்பாவி. அவரது பெற்றோருக்கும் நிலைமைகள் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களாலும் பாதிப்பிலிருந்து மீள்வது தான் முதலாவது இலக்காக இருந்தது. பின்னணி பற்றி ஆராயும் நிலையில் அவர்களின் மனநிலை காணப்படவில்லை. ஆனால், அம்ஷிகாவின் மரணத்தினை அடுத்து முதலில் கல்வி கற்ற பாடசாலையில் அனுபவித்த கசப்பமான சம்பவத்துக்கு காரணமான கணிதபாட ஆசிரியரும், குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் வசைபாடிய ஆசிரியரும், தனியார் கல்வி நிறுவன உரிமையாளரும் ‘கூட்டாளிகள்’ என்பது அம்ஷிகாவுக்கு தெரிந்திருக்காது. அதுமட்டுமன்றி, தன்னைச் சிதைத்த கணித பாட ஆசிரியரை பிணையெடுப்பதற்கு பின்னின்று உழைத்தவர் குறித்த தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் தான் என்பதும் அவருக்கு தெரிந் திருப்பதற்கு வாய்ப்பில்லை.
குறித்த தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஒரேயொரு தமிழர் என்பது உறுதியான விடயமாகின்றது. அவர் தன்னு டைய கட்சியில் காணப்படுகின்ற ‘அரசியல் செல்வாக்கை’ தாராளமாகவே கணித ஆசிரியருக் காக பயன்படுத்தியிருக்கின்றமையும் அம்பலமாகி யிருக்கின்றது. தற்போது கூட, குறித்த தனியார் கல்வி உரிமையாளரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் வெளிப்படுத்தப்படவில்லை. சிலவேளைக ளில் தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப் பாளர் என்று கூட காரணம் கூறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
தடுமாறும் அரசு அம்ஷிகாவின் விவகாரம் பூதாகரமாகியதும் கடந்த எட்டாம் திகதியும், ஒன்பதாம் திகதியும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விடயத்தினை கையிலெடுத்தன. எதிர்க்கட்சித்தலைவர் சஜித் முதல் மனோகணேசன், முஜிபுர் ரஹ்மான், நாமல் ராஜபக்ஷ, அஜித் பி பெரேரா என்று பலர் இச் சம்பவத்தை கையாண்டனர்.
இதில் அவர்களின் அரசியல் ஒழிந்திருந்தா லும், அவர்கள் கனதியான, காத்திரமான கேள்விகள் ஆளும் தரப்பினை தடுமாறச் செய்தை அவதானிக்க முடிந்தது. அதுமட்டுமன்றி ஆளும் தரப்பு இந்த விடயத்தில் நழுவல் போக்கில் செல்வதையும் அடையாளம் காண முடிந்தது. குறிப்பாக, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ், ‘உயிரிழந்த மாணவிக்கு மனநிலை சரியில்லை. அவர் உளவள சிகிச்சை பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை தந்துள்ளது’ என்று கூறி விடயத்தினை முடிவுக்கு கொண்டுவர முடிந்தார். ஆனால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எவ்வாறு மாணவி ஒருவர் உளவள சிகிச்சை பெறுவதற்கான அறிக்கையை அளிக்க முடியும் அதற்கான அங்கீகாரம் என்ன என்ற கேள்விகளுக்கு அவரால் பதிலளித்திருக்க முடிந்திருக்கவில்லை.
அதுமட்டுமன்றி, மாணவிக்கு மனநிலை சரியில்லை என்று எவ்வாறு முடிவுக்கு வரமுடியும் என்பதும் உளவள சிகிச்சை பெற்றுக்கொள்பவர்கள் அனைவரும் மனநிலை சரியில்லாதவர்களா என்பதும் மாணவி உளவள சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார் என்பதற் கும் அமைச்சர் சரோஜினி போல்ராஜிடம் பதிலில்லை.
அதேநேரம், இந்த விடயத்தில் சற்றே முற்போக்காக நடந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ‘மாணவின் முதற் சம்பவம் குறித்து முழுமையாக ஆராயப்படவில்லை’ என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அதாவது மாணவி மீதான துஷ்பிரயோக சம்பவம் விசார ணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும், பிரதமர் ஹரிணியும், குறித்த கணிதபாட ஆசிரியர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார், விசாரணைகள் இடம்பெறும். இதுவொரு உணர்வுபூர்வமான விடயம். அனை
வரும் பொறுப்புக்கூற வேண்டும்’ என்று அரசியல் வாதியாகவே நடந்து கொள்ள முற்படுகின்றார்.
அம்ஷிகாவிலிருந்து ஆரம்பமாகுமா? அம்ஷிகா தன்னை மாய்த்துவிட்டார். இனி அவர் வரப்போவதில்லை. ஆனால் அம்ஷிகா போன்று எத்தனையோ மாணவிகள் தங்களுக்கு நடைபெறும் அநீதிகளை வெளிப்படுத்துவ தில்லை. அவர்கள் பெற்றோரிடம் கூறினால் கூட அதனை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் தயாரில்லை. சட்ட நடைமுறைகளை தொடர் வதற்கு தயாரில்லை.
ஏனென்றால், பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்தை விடவும், சட்ட நடைமுறை களுக்காக காணப்படுகின்ற பொலிஸ், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நீதிமன்றம் உள்ளிட்ட கட்டமைப்புக்கள் ‘விசாரணைகள்’ என்ற பெயரில் செய்கின்ற துஷ்பிரயோகம் மிகவும் மோச மானவை. அதுமட்டுமன்றி, சமூகத்தில் பாதிக்கப் பட்ட வரை பாதுகாக்கின்ற கட்டமைப்புக்கள் இல்லை. மாறாக எள்ளிநகையாடுகின்ற, புறம்பேசு கின்ற, இயலுமானவரையில் வெறுப்பு பேச்சுக்க ளால் காயப்படுத்துகின்ற நிலைமைகள் காணப் படுகின்றன என்பது தான் யதார்த்தம்.
ஆகவே பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட அம்ஷிகாவுக்கு நீதியைப்பெறுவது ஒரு இலக்காக இருந்தாலும் அவ்வாறு பாதிக்கப்பட்டவரை சமூகத்தில் உரியவாறு கையாள்வதற்கும், அவரை அதிலிருந்து மீட்டெடுப் பதற்குமான மனப்பக்குவமும், முதிர்ச்சியும், முற்போக்கு சிந்தனையும் தோற்றுவிக்கப்பட வேண்டும். அதற்கான கட்டமைப்புக்கள் ஏற் படுத்தப்பட வேண்டும்.
இதனைவிடவும், அம்ஷிகாவைச் சிதைத்த கணிதபாட ஆசிரியர் கைது செய்யப்பட்டு பிணை யில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அதே பாடசாலையில் கற்கைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். இது சட்டவிரோதமான செயற் பாடாகும். அவர் நிரபராதி என்று நிரூபிக்கும் வரையில் பாடசாலை வளாகத்துக்குள் எவ்வாறு உள்ளீர்க்கப்பட்டார் என்பது பெருங்கேள்வியாகும்.
இதேநேரம், சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் 3 ஆவது உறுப்பு ரையானது சகல கட்டமைப்புக்களும் (அரச, தனியார்) சிறுவர் களின் அதியுயர் நலனைக் கருத்திற் கொண்டே செயற்படவேண்டும் வலியுறுத்துகிறது. அவ் வாறிருக்கையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பிரிவு உள் ளிட்ட கட்டமைப்புக்கள் என்ன செய்தன என்ற கேள்வியும் உள்ளது.
அதுமட்டுமன்றி 2007இல் இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 3 ஆம் பிரிவு முறையற்ற விதத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளதோடு சகல கட்டமைப் புக்களும் சிறுவர்களின் அதியுயர் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என வலியுறுத்துகின்ற அச்சட்டத்தின் 5 ஆம் பிரிவு நேர்மறையான விடயங்களுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை என்பதும் இங்கு முக்கிய விடய மாகின்றது.
ஆக, சட்டங்கள் இருந்தும், பொறிமுறைகள் இருந்தும் பக்கச்சார்பற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கும் பொறுப்புவாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை தான் மாணவியின் உயிர் பறிபோகுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது. ஆகவே, பக்கச்சார்பற்ற விசாரணைகள் ஊடாக கடுமையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் மாணவி அம்ஷிகா இறுதி நபராக இருப்பார்….அம்ஷிகாவிலிருந்து ஆரம்ப மாகட்டும்.