அமெரிக்க ஈரான் போர்: இலங்கையின் பொருளாதாரம் ஈடு செய்ய நமக்கு நாமே துணை! : பா.அரியநேத்திரன்

இலங்கை 2022 தொடக்கம் 2026 தற்போதுவரை கடு மையான பொருளாதார நெருக்கடியிலிருந்து, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மெதுவான மீட்சியைச் சந்தித்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் வந்தாலும், வறுமை விகிதம் 2026 வரை 20% க்கும் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நிலைப்படுத்தல், கடன் மறுசீரமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவை மீட்புக்கு உதவினாலும், மக்கள் மீதான நிதிச்சுமை தொடர்ந்து நீடிக்கிறது.
2024 இல் இலங்கையின் பொருளாதார நிலை குறித்த முக்கிய அம்சங்களாக 2024 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடைந்ததாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இது 2022 இன் பொருளாதாரச் சரிவுக்குப் பின் ஏற்பட்ட நேர்மறையான மாற்றமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் மற்றும் கடன் மறுசீரமைப்பு  விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, இரண்டாவது தவணை பெறப்பட்டது. மேலும், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, ‘கட்டுப்படுத்தப்பட்ட திவால்’ நிலையிலிருந்து இலங்கை மீண்டது. வறுமை நிலை இன்னும் உச்சத்தில் உள்ளது, குறிப்பாக 2026 ஆம் ஆண்டு வரை அது 20% க்கும் அதிகமாகவே இருக்கும் என உலக வங்கி அறிக்கை கணித்துள்ளது.
இலங்கையானது கிராமங்கள் நிறைந்த நாடு என்ற வகையையும் கொண்டது. இங்குள்ள கிராமங்களில் பெரும்பாலானவை பொருளாதார நிலையில் மிகப் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இலங்கையிலுள்ள பதிவு செய்யப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை சுமார் 14000 மற்றும் அதே அளவு எண்ணிக்கையில் கிராம சேவக உத்தியோகத்தர்கள் பிரிவுகளும் உள்ளன.
இவ்வாறான நிலையில் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைமை அமெரிக்கா ஈரான் யுத்தம் அதனால் ஏற்பட்ட மத்திய கிழக்கின் போர் தாக்கத்தின் விளைவுகளால் இன்று இலங்கை வாழ் மக்களும் குறிப்பாக வடகிழக்கு மக்களும் பல நெருக்கடிகளை சந்திக்கும் ஆண்டாக எதிர்வரும் சித்திரை புத்தாண்டு மலர உள்ளது.
போர்களால் பேரழிவை ஏற்படுத்தி, கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை அழிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கின்றன. போர் நிலவும் நாடுகளில் சராசரியாக 30% பொருளாதார உற்பத்தி சரிவு மற்றும் 15% வரை பணவீக்கம் ஏற்படுகிறது. இது முதலீடுக ளைக் குறைத்து, நீண்ட கால வறுமை மற்றும் கடன் சுமையை உருவாக்குகிறது.
போர் பொருளாதாரத்தின் முக்கிய பாதிப்புகளாக உற்பத்தி இழப்பு தொழிற்சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் மனித மூலதனத்தின் அழிவு. பணவீக்கம்,போருக்கான நிதியைத் திரட்ட நாணயங்களை அச்சிடுவதால், பொருட்க ளின் விலை கடுமையாக உயர்கிறது.
உள்நாட்டு மற்றும் அண்டை நாடுகள் பாதிப்பு போரிடும் நாடுகள் மட்டுமல்லாது, அண்டை நாடுகளிலும் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, வர்த்தகம் குறைகிறது. நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி குறைக் கப்பட்டு, ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த உற்பத்தி களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
வேலைவாய்ப்பு மற்றும் வறுமை போரின் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, வறுமை நிலை மோசமடைகிறது. இவ்வாறான தாக்கம் இலங்கையிலும் ஏற்படலாம். இவைகளில் இருந்து ஈடு செய் யக்கூடிய   விடயங்களை தற்போதைய தேசிய மக்கள் அரசால் முன் எடுத்தாலும் அவர்களால் முழுமையாக இலங்கையின் பொருளாதாரத்தை மீளவும் சீர் செய்வது என்பது இன்னும் பல வருடங்கள் கடக்கலாம். எதிர்கட்சிகளை பொறுத்தவரை வழமையாக ஆளும் தரப்பை குற்றம் சாட்டும் பராம்பரிய அரசியலே இப்போதும் உள்ளன.
ஆனால் இந்த பொருளாதார நெருக்கடிகளால் மின்சார வாடகை, எரிபொருள் விலை ஏற்றம், என்பவற்றின் தாக்கம் அத்தியாவசிய பொருட்கள் தொடக்கம் உடுதுணி மற்றும் சகல உணவுப் பண்டங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. மக்களைப் பொறுத்தவரை ஆடம்பர பொருட்களையும், அனாவசிய பொருட்களையும், அலங்காரப் பொருட்களையும் வாங்குவதை தவிர்த்து அன்றாட உணவுப்பொருட்களை மட்டும் கொள்வனவு செய்ய பழகுவது அவசியமாகும்.
இவைகளுடன் வீட்டுத் தோட்டங்கள், சுயதொழில் வளர்ச்சியையும் ஊக்கப்படுத்துவதும் கட்டாயமாகும் ஏனெ னில் ஈரான் அமெரிக்கா போர் எப்போது முற்றுப்பெறும் மேலும் அழிவுகளை ஏற்பட்டுத்துமா என்பதற்கெல்லாம் எவராலும் விடை கூறமுடியாது.
விவசாயம் சார்ந்த தொழில்,முதலில் வருவது கால்நடை வளர்ப்பு, கறவை மாடுகளை நிலம் உள்ளவர்கள் வீட்டில் வளர்பது அதனால் பால் உற்பத்தியும், அதன் சாணம் வயலுக்கு சிறந்த   உரமாக பயண்படும்.
வீட்டுத் தோட்டம் இருந்தால் வாழை, முருங்கை மற்றும் காய்கறி பயிரிடலாம். இது குடும்ப தேவைக்கும், சில்லறை வருமானத்திற்க்கான சிறந்த  பக்க வியாபாரம். மேற்கூறிய மூன்று தொழிலை சிறப்பாக நடத்தினால் குடும்பம் நடத்த நமக்கு தேவையான பொருளாதாரம் நல்ல முறையில் கிடைக்கும்.
வடக்கு கிழக்கு மக்களை பொறுத்தவரை ஈழ விடுதலைப் போராட்டங்களில் பல பொருளாத தடைகளை சந்தித்த மக்கள் என்பதால் அவர்களுக்கு ஏனைய மாவட்ட மக்களை விட அனுபவம் உண்டு. குறிப்பாக 2006 ஜனவரி தொடக்கம் 2010 வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று இலட்சம் மக்கள் முடக்கப்பட்டு பாரிய போராட்டம் கண்மூடித் தனமான எறிகணைத் தாக்குதல், விமான குண்டுத் தாக்குதல் என்பவற்றுக்கு முகம்கொடுத்து ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் கஞ்சி குடித்து வாழ்ந்து பழக்கப்பட்டவர்களும் பல ஆயிரம் மக்கள் பல இடர்களை சந்தித்து பொருளாதார நெருக்கடிகளை சமாளித்த வரலாறுகள்  உண்டு.
ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடி அமெரிக்கா ஈரான் போரால் இலங்கை  பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும்போது சகல மக்களும் சுய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சிக்கனமான வாழ்க்கையை கடைப்பிடிப்பது காலத்தின் தேவையாக உள்ளது.
சுயதேவை பொருளாதார நடைமுறையை பின் பற்றுவதன் மூலம் ஒரு சமூகம், கிராமம் அல்லது நாடு தனக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உணவு, உடை, உறைவிடம்  பிறரைச் சாராமல், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்தும் முறை ஒன்றை கையாள்வதற்கு உள ரீதியான மாற்றத்தை இப்போது ஏற்படுத்துவது அவசியமாகும். இறக்குமதியை எதிர்பார்க்காமல் , உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்து, பொருளாதாரத்தை கட்டி எழுப்பு வதே காலத்தின் தேவையாகும்.
தற்போதைய உலக போர் சூழல் அதனால் ஏற்படும் தாக்கம் உள்ளாட்டில் மக்கள் முகம் கொடுத்து அதனை எதிர்கொள்ள கூடிய செயல் அமர்வுகளையும், கருத்தரங்குகளையும் சகல சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், மத தலைவர்கள்,பொது நிறுவனங்கள் தற்போது மக்களுக்கு விழிப்பூட்டும் செயல்பாடுகளை முன் எடுப்பதும் இன்றைய இக்கட்டான காலத்தில் அவசியமாகும்.
தற்போதைய ஈரான் அமெரிக்கா போர் எப்போது முற்றுப்பெறும் என்பதை எவராலும் கூறமுடியாத நிலையே காணப்படுவதால் இதனை உணர்ந்து நாமும் மற்றவர்களில் தங்கி இராமல் நமக்கு நாமே துணை என்ற எண்ணப்பாட்டுடன் வாழ்வதே சிறப்பு.