அமெரிக்காவின் 30 சதவீத ஏற்றுமதி வரி, இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும்!

அமெரிக்காவின் தீர்மானத்தின் தற்போதைய நிலைவரத்தின் படி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு இன்றிலிருந்து 30 சதவீத தீர்வை வரி நடைமுறைக்கு வரும். இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பானது ஏற்றுமதி சந்தையில் இலங்கைக்கு பெரும் சவாலாக அமையும் என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேலும் அமெரிக்காவின் வரி விதிப்பு இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. தற்போது இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியில் ஏதேனும் சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது இன்று அல்லது எதிர்வரும் வாரங்களில் கிடைக்கக் கூடும். எவ்வாறிருப்பினும் இன்று முதல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத வரி செலுத்தப்பட வேண்டும்.

அதற்காக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் இலங்கையில் அதிகரிக்கப்படாது. அந்த வகையில் ஏற்றுமதியூடாக மிகக் குறைந்த இலாபமே கிடைக்கப் பெறும். எவ்வாறிருப்பினும் மில்லியன் கணக்கான உற்பத்திகள் மூலம் பாரிய வருமானத்தைப் பெற முடியும். எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள வரியுடன் எம்முடன் போட்டியிடும் நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை ஒப்பிட்டு பார்ப்ப வேண்டிய தேவை காணப்படுகிறது.

இலங்கைக்கு போட்டியான நாடுகளுக்கு எம்மை விட குறைவான வரி விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அது எமக்கு சவாலாக அமையும். கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளே தற்போது எமக்கு போட்டியாகவுள்ளன. இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க போட்டித்தன்மையை எமக்கு ஏற்படுத்தும்.

இலங்கை தனக்கு கிடைக்கப் பெற்றுள்ள வரியை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதைப் போன்று, இந்தியாவும் இன்னும் வரியைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு எம்மை விட குறைவான வரி கிடைத்துள்ளதால் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால் அடிக்கடி வரி திருத்தம் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதற்கமைய எதிர்காலத்திலும் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம். எவ்வாறிருப்பினும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிடுவது எமக்கு சவாலாகவே இருக்கும் என்றார்.