அமெரிக்காவின் வரி தொடர்பில் இலங்கை தூதுக்குழு இன்று பேச்சுவார்த்தை…

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பாக இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (27) வொசிங்டன் டிசியில் ஆரம்பமாகின்றது.

இந்த பேச்சுவார்த்தைக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியபெரும தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள் குழு விடுத்த அழைப்பின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இருநாட்டு பிரதிநிதிகளும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மீது 44 சதவீத தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த நிலையில், உடனடியாக நிவாரணம் கோரி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக அமெரிக்காவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை இலங்கைக் குழு நடத்திய நிலையில், அந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாகவும், விரைவில் இருநாடுகளாலும் இதுகுறித்த கூட்டறிக்கை ஒன்று வெளியாக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
எனினும் தற்போது மீண்டும் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.